
முதலமைச்சர் விஜய்யை இழிவாக பேசியதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் விவசாயிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஆகஸ்ட் 3) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், “ ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால், இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு தண்ணீர் வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்) என்று பேசினார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்தனர். மேலும் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று (ஆகஸ்ட் 4) காலை முதலே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், போலீஸார் அவர்களைத் தடுத்தனர். இதனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுகவின் வழக்கறிஞர்களும் போலீஸாரால் தடுக்கப்பட்டதால் பரபரப்புஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து உதயநிதி வீட்டுக்குள் சென்ற போலீஸார், அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தனர். இதனை தலைமை நீதிபதி தர்மாதிகாரி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது திமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. “இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், காவிரி பிரச்னையை மடை மாற்றவே காவல்துறை என்னை கைது செய்துள்ளது. இந்த ரீல்ஸ் ஆட்சி செய்வதெல்லாம் காமெடியாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீஸார், தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சா லைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



