
(அரையடி வெண்டளை விருத்தம்)
1)தழலாய்த் தகித்திட்ட வாழ்க்கையிலே!
தரித்திரம் தாக்கிய வேளையிலே!
குழந்தையர் நால்வர் இருந்ததனால்
கொடுக்க மறுத்தனர் வீடவர்க்கு
நிழலாய் ஒருயூதர் வீடுதந்தார்*
நலிந்தவர் வாழும் பகுதியிலே!
உழன்றனர் அங்கே வறுமையிலே!
உலகம் கசந்தது உண்மையிலே
2)கருத்தரித் தாளே மறுபடியும்
காரலின் பத்தினி ஜென்னியவள்
மருத்துவம் பார்க்க முடியவில்லை
மறுபடி யும்நோய் தனில்விழுந்தாள்
சுருங்கிடச் சொல்லின் அவர்பிழைப்பு
சுத்த நரகமாய்ப் போனதன்று
செருக்குடன் மார்க்ஸும் எதிர்த்துநின்றான்
சிரமம் நிறைந்தஅச் சூழ்நிலையை
3)வறுமை தணித்திட ஜென்னியவள்
மாமனை**த் தேடியே ஹாலண்டிற்கு
சிறுமைப் படுவம் எனத்தெரிந்தும்
சென்றாள் உதவிகள் பெற்றிடவே
புரட்சிக ளாலே வெறுப்படைந்து
பூமியில் வாழ்ந்த ஃபிலிப்ஸ்அவனும்
பொறுமை யுடன்”ஃபா கெசி”***தனுக்கே
புதுப்பரி சொன்று கொடுத்துவிட்டான்
4)வேதனை தன்னைச் சுமந்துகொண்டு
வெறுங்கை யுடனே திரும்பிவந்தாள்
சோதனைக் காலம் தொடர்ந்ததாலே
சோர்வுடன் வாழ்க்கை தொடர்ந்ததுவே!
சாதனை செய்யப் பிறந்தவனும்
சங்கடம் தன்னில் கிடந்துழன்றான்
பாதக மானஇச் சூழலிலும்
பாட்டாளி வர்க்கத்தை யேநினைத்தான்
5)கற்றுத் தெளிந்தநம் பேரறிஞன்
கைவினை ஒன்றையும் கற்கவில்லை
மற்ற அகதிகள் கைவினையால்
வாழ்க்கையைச் சற்றே நடத்தினர்காண்!
தொற்றுப் பரவிடும் சூழலையே
தொலைத்து அமெரிக்கா சென்றிடவே
சற்று நினைத்தான் முடியவில்லை
சந்தர்ப்பம் நன்றாய் அமையவில்லை
6)மார்க்ஸின் குடும்பத்தை வாழவைக்க
மான்சஸ்டர் ஏங்கல்ஸ் விரைந்தனனே!
சீர்மிகு அப்பன் நிறுவனத்தில்
சிப்பந்தி வேலைதான் செய்திடவே
தீர்ந்தது கஷ்டமும் ஓரளவு
சிந்தனைச் சிற்பி குடும்பத்திலே
நேரம் கிடைத்தது காரலுக்கு
நிம்மதி யாகப் படிப்பதற்கு
7)உயர்தர மான மதுநுகர்ந்தான்
உண்மையில் ஏங்கல்ஸ் எனும்அறிஞன்
உயர்தர மான விடுதிசென்று
உருவத்தில் செல்வந்தன் ஆகிவிட்டான்
அயர்வினைப் போக்கிட வேட்டைகளை
அடிக்கடி செய்தான் இருப்பினுமே
துயரில் உழன்றதன் நண்பனுக்கு
உதவிகள் செய்ய மறக்கவில்லை
8)கம்பெனிக் கல்லா தனிலிருந்து
காசைத் திருடி அனுப்பிவைத்தான்
தம்படிக் காசு கிடைத்திடினும்
தயங்கிட மாட்டான் அனுப்பிவைக்க
பொம்மை மருந்து எனப்பலவும்
பொறுமை யுடனே அனுப்பிவைத்தான்
நம்பிக்கை கொண்டுதன் நண்பனையே
நச்சரித் திட்டான் அறிஞன்மார்க்ஸும்

9)ஆளும் அரசர் அனைவரையும்
அழிக்கச் சதித்திட்டம் தீட்டுவதாய்
நாளும் பிரஷ்யாவை ஆண்டிருந்தோர்
நம்பியே காரலைப் பின்தொடர்ந்தார்
வாழும் இடத்தினை நோட்டமிட்டு
வம்பாய்ச் சிலசெய்தி சேகரித்தார்
தோழமை நாடான இங்கிலாந்து
தொட்டும்அச் செய்தியைப் பார்க்கவில்லை
10)ஆட்சி நடத்திடும் மன்னர்களை
அழிப்பது மட்டும் வழியெனவே
நீட்டி முழக்கினர் தோழர்சிலர்√
நிச்சய மாய்மார்க்ஸ் அதைமறுத்தான்
நாட்டில் உதிக்கும் புரட்சியெல்லாம்
நம்விருப் பம்போல் உதிப்பதில்லை
கேட்கும் அவைவும் நிபந்தனைகள்
கேடில்லா மந்த கதியினிலே
*64-டீன் தெரு, சோஹோ.
**மார்க்ஸின் மாமன் லயன் ஃபிலிப்ஸ்
***மார்க்ஸிஸ் கைக்குழந்தை
√ இதில் குறிப்பிடத் தக்கவர்
ஆகஸ்ட் வில்லிச்( இது கம்யூனிஸ்ட் லீக்-கில் நடந்த குழப்பம்)
– மனோந்திரா ( தொடரும்)
இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.



