காரல் மார்க்ஸ் சரிதம்- 15

   (கட்டளை அறுசீர் விருத்தம்)

1)‘‘வில்லிச்’’ எனுமொரு தோழன் இருந்தனன்
வில்லனாய் காரலுக்கு
மல்லுக் கழைத்தான் உடனடி யாய்அவன்
மார்க்ஸையே ஒண்டிக்கொண்டி
வல்லவ னாகத் திகழ்ந்தான் அவனுமே
வாகாய்ச் சுடுவதிலே
சொல்லும் அளவில் சுடுதிறன் காரலுக்
கில்லை அதுமெய்யே!

2))மறுத்தான் அதனை அறிஞனாம் காரல்
மடத்தனம் என்றெண்ணி
உறுத்துள்ள நண்பன்* மார்க்ஸுக்கு மாற்றாய்
உடன்வாய் திறந்தானே!
வெறித்தனம் கொண்டவன் விட்ட சவாலை
வெடுக்கெனப் பற்றினானே!
இறுதியில் நண்பனும் குண்டடி பட்டுத்தான்
இல்லம் அடைந்தானே!

*கொண்ராடு ஷ்ராம்- மார்க்ஸின் நெருங்கிய நண்பன்

3)“பொதுவுட மைலீக்” பொசுக்கெனச் செத்தது
பொல்லாத தோழர்களால்
*சதிவழக் கில்மார்க்ஸ் பெயரும் இருந்தது
சங்கடம் கூடியது
புதுப்புது வேலைகள் வந்தன மார்க்ஸுக்கு
போகிற போக்கினிலே
பிதுங்கின கண்களும் தோழர்கள் தம்மைப்
பிணையில் எடுப்பதற்கே!

*கொலோன் தேசத்துரோக வழக்கு

4)பசியும் பிணியும் இணைந்துதான் கொன்றன
பச்சிளம் பாலகனை*
அசைக்க முடியா மனங்கொள் அறிஞன்
அழுது புலம்பிவிட்டான்
நசிந்த தினங்களில் கூட இருந்தோர்
நயவஞ் சகரானார்**
வசித்த தெருவிலே வேறொரு வீட்டிற்கு
வந்தனர் மார்க்ஸினரே***

“ ஹென்ரிச் கெய்டோ ஃபாகஸ்- ஒரு வயதுகூட நிரம்பாத மார்க்ஸின் மகன்
** கொண்ராடு ஷ்ராம் இதில் முக்கியமானவன்
***டீன் தெரு 64 ஆம் எண்ணுள்ள வீட்டிலிருந்து 28 ஆம் எண்கொண்ட வீட்டு மாடிக்குக் குடிபெயர்ந்தனர்

 (1851)

5)பேணிய நட்புகள் போனதை எண்ணிப்
பெரிதும் கவலையுற்றான்
வீணில் அரைகுறை மூடர்* தமைஅவன்
வீழ்த்த முயற்சிசெய்தான்
சாணி உருட்டிடும் வண்டிடம் சிங்கமும்
சண்டை இழுப்பதுவோ?
ஆணி யடித்தது போல்மார்க்ஸ் இடத்தில்
அனைவரும் கூறினரே!

*காரல் வோக்ட்,,ருடால்ஃப் ஷ்ராம், காட்ஃரைடு கின்கெல் முதலியோர்

6)நண்பனைப் போலே நடிப்பவர் என்றுமே
நஞ்சினும் கெட்டவரே!
உண்மை எதிரி அவரை விடவும்
உயர்வென எண்ணினான்மார்க்ஸ்
பண்புள்ள பாட்டாளி வர்க்க விடுதலை
பாரில் கிடைத்திடவே
மண்ணிலே வர்க்கத் துரோகி களைமார்க்ஸ்
வன்மையாய்ச் சாடினானே!

7)தினையள வேனும் வருக்க விரோதச்
செயல்செய் திடும்நபரை
பனையள வில்நான் எதிர்த்திடு வேனெனப்
பட்டெனக் கூறினான்மார்க்ஸ்
சினம்குறை யாமல் அனுதினம் வாழ்ந்தநற்
சிந்தனை யாளனாம்மார்க்ஸ்
அனல்பறக் கும்படி செய்தான் விமர்சனம்
அன்பர்கள் யாவரையும்

8)இரண்டு அறைகள் இருந்தன வீட்டில்
இருமூ வருக்கெனவே
புரண்டு படுக்கவும் வீட்டில் இடமது
போதிய தாய்இலையே
திரண்டு கிடந்தன காரலின் மேசையில்
சின்னப் பொருள்பலவும்
இரண்டு விரற்கிடை தூசி இருந்தது
எங்கும் அறையினிலே

9)“டாடி” எனவே அழைத்தனர் மார்க்ஸையே
டீன்தெருப் பிள்ளைகளும்
ஆடியும் பாடியும் பேசியும் மார்க்ஸிடம்
அன்பைப் பொழிந்தனரே!
வாடி இரப்போர் தெருவினில் வந்தால்
வழங்குவான் காசுகள்மார்க்ஸ்
ஓடி உதவிகள் செய்திடு வான்மார்க்ஸ்
உழைக்கும் மனிதருக்கே

10)சாதலைத் தூண்டும் வறுமை இருந்தும்
தளர்ந்திட வில்லையவன்
பாதகம் செய்யும் தரித்திரம் கண்டும்
பயப்பட வில்லைஜென்னி
பேதம றுத்து மனிதரைக் காக்கப்
பிறந்தனர் பூமியில்தான்
காதல் கவிதைகள் பாடித் திரிந்தனர்
கைகளைக் கோர்த்தபடி
– மனோந்திரா (தொடரும்)

இந்த கவிதைத் தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *