
பாஜகவில் இருந்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ததை அக்கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை , கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை சந்தித்து பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார். அதில், தமிழ்நாடு பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணங்களை குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்து பேசினார். ஆனால், அவரது ராஜினாமாவை பாஜக ஏற்காமல் இருந்தது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைமையில் இருந்து அவரிடம் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ததை கட்சித் தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார். புதிய கட்சி துவங்குவதற்கான ஏற்பாட்டில் அண்ணாமலை இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



