
தோழர் அருணன் அவர்கள் எழுதிய லெனின் வாழ்வும். சிந்தனையும் எனும் புத்தகம், மதுரையில் ஆய்வரங்க நிகழ்வில் 50 சதவீத தள்ளுபடியில் கிடைத்தது. 100 ரூபாய்க்கு 536 பக்கம் உள்ள அருமையான புத்தகம். வாங்கி பாதி வாசித்து விட்டு வைத்திருந்தேன். நேர நெருக்கடி. ஆனால். விமர்சனப் போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததும் மீண்டும் புத்தகத்தை தேடிவாசிக்கத் துவங்கினேன். ஒரு புரட்சிக்காரனின் போராட்ட களமான வாழ்வை கூட, இவ்வளவு சுவாரசியமாய் சொல்லிவிட முடியுமா என்றால், தோழர் அருணன் அவர்களின் தேர்ந்த வாசிப்பும், எளிய வாசகனுக்கு கூட அதை லாவகமாய் கடத்தும் அபாரமான மொழி ஆளுமையும் தான், இந்த நூல் வெற்றியடைய பெருங்காரணமாக இருந்திருக்க முடியும். அந்த வகையில் மார்க்சியர்களுக்கு இதொரு முக்கியமான புத்தகம்.
1870 ஏப்ரல் 22-ல் வால்கா நதித் தீரத்தில், இலியா மரியா தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் விளாதிமிர் இலீயிச் லெனின் பிறக்கிறார். விளாதிமிர் என்றால் ‘உலகை ஆள்பவன்’ என்று பொருள்படும்படி, மிகப் பொருத்தமான பெயரை சூட்டியிருக்கிறார்கள். உலகம் உள்ளளவும் அப்பெயர் ஒளி வீசும்படியான செயற்கரிய செயலை செய்து விட்டு, இன்று வரை அமைதியான நீள்துயிலில் ஆழ்ந்திருக்கிறார், புரட்சியை இப்பூமியில் சாத்தியப்படுத்திய அன்புத் தோழர் லெனின் அவர்கள்.
55 வயதில் தந்தை சாக, அண்ணன் அலெக்சாந்தரோ, ஜார் மன்னரின் கொடூர ஆட்சியை எதிர்த்து போராட்ட களத்தில் தனது உயிரை விடுகிறார், நெருக்கடியான காலகட்டத்தில் நின்று கொண்டு எளிய மக்களின் சமூக விடுதலைக்காக சிந்திக்கிறார் லெனின். கசானா மாகாணத்தில் சட்டம் படிப்பதற்காக சென்று, கல்வி கட்டண உயர்வை எதிர்த்து போராடுகிறார்.

நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நீக்குகிறது. மீண்டும் தன் சொந்த கிராமத்திற்கு சென்று புத்தக வாசிப்பில் மூழ்குகிறார். ஜெர்மன் மொழியை கற்று மூலதனத்தை ரஷ்ய மொழியில் பெயர்க்கும் போது அவருக்கு வயது 20. அறிவின் தீட்சண்யம் சுடர் விடும் காலமாக இருந்தது. சிறப்பு அனுமதியில் சட்டத் தேர்வை எழுதி முதலிடம் பிடிக்கிறார். 23 வயதில் வழக்கறிஞராக தொழில் புரிய ஆரம்பிக்கிறார். ஏழை. எளிய விவசாயப் பெருங்குடிமக்களே இவரின் வாடிக்கையாளர்கள். ஒய்வு நேரத்தில் மார்க்சிய வட்டத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு மூலதனத்தை பயிற்றுவிக்கிறார். எழுதவும் ஆரம்பிக்கிறார். இந்த காலகட்டத்தில் தனது எதிர்கால துணையான குரூப்ஸ் கயாவை சந்தித்து இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.திருமணம் செய்துகொள்கிறார்கள்.
பீட்டர்ஸ்பர்க் வந்து, தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்டக் கழகத்தை ஆரம்பித்து, மார்க்சிய குழுக்களை ஒருங்கிணைக்கிறார். இவரின் ரகசிய செயல்பாடுகள் ஜார் அரசருக்கு தெரியவர கைது செய்யப்படுகிறார். சிறைக்குள் இருந்து புத்தகங்களை வாசிக்கவும், கட்சித் திட்டங்களை எழுதவும் தொடங்குகிறார். இவரின் ரகசிய எழுத்துக்களை பாலில் நனைத்து எழுதி, சங்கேத குறியீடுகள் மூலம் குரூப்ஸ்கயாவின் வழியே தோழர்களுக்கு கடத்தப்படுகிறது. 1898 மார்ச்சில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆரம்பமானது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப வடிவம். அப்போது லெனின் சிறைக்குள் இருக்கிறார். 1900 சிறையிலிருந்து வெளிவருகிறார். தீப்பொறி என்ற பத்திரிக்கையை ஆரம்பிக்கிறார். நூல்களை மொழி பெயர்க்கவும், விமர்சன உரைகளை எழுதவும் துவங்குகிறார். விடியல் என்ற மற்றொரு பத்திரிகையும் துவங்குகிறார். மார்க்சிம் கார்க்கி, டிராட்ஸ்கி, டால்ஸ்டாய் இவர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.

அருணன்
கட்சிக்கான மாநாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதில் வாதப் பிரதிவாதங்களும் எழத்துவங்கி தீப்பொறி பத்திரிக்கையிலிருந்து விடுபடுகிறார். மாற்றாக முன்னேறு என்ற பத்திரிக்கையை ஆரம்பிக்கிறார். லெனினால் எழுதுவதும், சிந்திப்பதும், உரையாடுவதும் நிறுத்தவே முடியாத வாழ்வியல் சூழல் அமைகிறது.
ஒன்றை மூடினால் இன்னொன்று எனத் தயங்காமல், பத்திரிகையை தொடர்ந்து வெவ்வேறு பெயர்களில் வெளியாகி,அவரின் தீப்பொறி பறக்கும் கட்டுரைகள் பாட்டாளி வர்க்கத்திடம் சேர்ந்து கொண்டே இருந்தது. கட்சியின் அமைப்பிற்குள்ளும், உட்கட்சி ஜனநாயக உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணம் இருந்தார். போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் எனும் இரு பிரிவில் இவர் போல்ஷ்விக்குகள் எனும் பெரும் பான்மை பக்கமே நின்றார். தொடர்ந்து ஜார் மன்னர்களை ஆட்சி கொடூரங்களை எதிர்த்து களமாடிக் கொண்டு இருந்தார்.
தோழர் லெனின் மீதே கட்சியில் இருந்து, விசாரணைக் கமிஷன் வைத்த சுவாரசியமான சம்பவங்களும் உண்டு. அதைத் திறமையாக நேர் கொண்டு தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து, வெற்றி கண்ட வரலாறும் இருக்கிறது. காரல் மார்க்சின் புதல்வி லௌரா மற்றும் அவரது கணவர் ஒரே நேரத்தில் மரணமடைகிறார்கள். அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றியிருக்கிறார். இந்தியாவின் நிலை குறித்தும், ஆங்கிலேயர்கள் அட்டூழியம் குறித்தும் விரிவாக கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருக்கிடையே எழுதப்பட்ட 1386 கடிதங்களை விமர்சனப் பார்வையுடன் மொழிபெயர்த்திருக்கிறார். 1916 ஜூலையில் அவரது அம்மா காலமாகிறார். அவரது இறப்பில் கலந்து கொள்ள முடியாத சூழலில் தொலை தூரத்திலிருக்கிறார். உடல் நலக்குறைபாடு காரணமாக 1917-ல் ரஷ்யப் புரட்சி துவங்கியபோது கூட பெர்லினில் நூலகத்தில் தான் இருந்தார். கொடூரமான ஜார்மன்னர்களின் ஆட்சி வீழ்த்தப்படுகிறது.மக்கள் ஜனநாயக அரசை கட்டி எழுப்புவதற்காக நாடு திரும்புகிறார். அதன் பிறகு ரஷ்யா திரும்பினார். நவம்பர் 7-ல் ரஷ்ய புரட்சி வெற்றி பெற்ற பிறகு, அரசு அதிகாரத்தை கைப்பற்றி புதிய ரஷ்யாவை வடிவமைக்கத் துவங்கினார். முதல் புரட்சி அரசின் தலைவராக லெனினும், தேசிய இனங்களின் விவகாரத்துறை அமைச்சராக ஸ்டாலின் உட்பட 16 தோழர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . அவர்கள் கனவு கண்ட ரஷ்யாவை வடிவமைக்கத் துவங்குகிறார்கள். மாஸ்கோ புதிய தலைநகராகிறது. ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாகிறது. நிலச்சீர்திருத்தம் செய்யப்படுகிறது.பல்வேறு தொலை நோக்கிலான திட்டம் தீட்டப்படுகிறது.
இந்நேரத்தில் லெனினை கொல்வதற்கு ஒரு கொலை முயற்சி நடைபெறுகிறது.தொழிலாளர் கூட்டத்தில் உரையாற்ற வந்த போது, ஒரு பெண்ணால் சுடப்பட்டு மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் காப்பற்றப்படுகிறார். அதில் ஒரு குண்டு மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், இரண்டு குண்டுகள் உடம்பில் தங்கி விட, இறுதியில் அவர் சாவதற்கு அந்தக் குண்டே காரணமாகி விடுகிறது. இதற்கிடையில் கம்யூனிஸ்ட் அகிலம் ஆரம்பிக்கப்படுகிறது. அதன் இரண்டாவது மாநாட்டில் இந்தியாவில் இருந்து எம்.என்.ராய் கலந்து கொள்கிறார். பெண்கள் அமைப்பு, விவசாயிகள், தொழிலாளிகள் அமைப்பு என ஏராளமான துணை அமைப்புகளை கட்டியெழுப்புகிறார். இடைவிடாத இயக்கப் பணிகள், நாட்டை மேம்படுத்தும் செயல்திட்டங்கள் என, நிற்க நேரமில்லாது பம்பரம் போல் சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் மேலும் சீர் கெடத்துவங்கியது.
உடலில் இருந்த குண்டுகளை அகற்றும் அறுவைச் சிகிச்சை முடிந்தும், அவரால் நலம் பெற முடியவில்லை. அவரது மனைவி குரூப் காயாவும் உடல் நலிவுற்ற நிலையில் லெனினை பாதுகாத்து வந்தார். உடலின் உள்ளுணர்வு உந்தித்தள்ள அவர் உயில் ஒன்றை எழுதினார். சொத்துக்கள் ஏதுமில்லை, மனைவியைத் தவிர வாரிசுகள் ஒன்றுமில்லை, பின் யாருக்காக உயில் எழுதினார். தான் நேசித்த ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியை, அடுத்ததாக வழிநடத்தும் தகுதி யாரிடம் இருக்கிறது என்பதை கட்சிக்கு உணர்த்த, ஒவ்வொரு தோழர் குறித்தும் சுயவிமர்சனக் குறிப்புகளை எழுதி வைத்தார்.
இவரது விமர்சனக்கணைக்கு தோழர் ஸ்டாலினும், டிராட்ஸ்கியும் தப்பவில்லை. ஆனால் இவரது கருத்தை உள்வாங்கித்தான், இவரது மறைவிற்கு பின் ஒரு சரியான தலைமையை ஸ்டாலின் வழியே தேர்ந்தெடுத்தது. 1924 ஜனவரி 21-ம் தேதி தனது 54 வயதில், கிரெம்ளின் மாளிகையில் மானுட சமத்துவத்திற்காக, அயராமல் உழைத்த லெனின் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். வால்கா நதித் தீரத்தில் பிறந்து வளர்ந்தவ,ர் வால்கா நதி போல உலகம் உள்ளளவும் நிலைத்திருப்பார். அவரது மரணம் கண்டு உலகமே அழுதது என்றால், சோவியத் ரஷ்யா எவ்வாறு துடிதுடித்திருக்கும். அவரது பொன்னுடல் மண்ணில் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு இன்றளவும் உலக மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். என்றேனும் ஒரு நாள் அறிவியல் உலகு, மனிதர்களை உயிர்ப்பிக்கும் வித்தையை கற்றால் இம்மானுட மேன்மைக்காக அவர் மீண்டும் உயிர் பெற்று எழுவார்.
தோழர் அருணன் அவர்களின், லெனின் வாழ்வும், சிந்தனையும் எனும் இந்தப் புத்தகமானது, லெனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்லாது, அவரது சிந்தனை, தத்துவப் புலம், காரல் மார்க்சை உள்வாங்கி கம்யூனிஸ்ட் கட்சியை கட்டிய விதம், அமைப்பு, கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், அமைப்பில் நிகழ்ந்த தத்துவார்த்தப் பிரச்னைகள், குடும்பம், அவர் எழுதிய புத்தகங்கள் என யாவற்றையும், எவர்க்கும் புரியும் எளிய மொழியில், குழந்தைக்கு பால் புகட்டுவதைப் போல, உண்மையாக, நேர்மையாக ஏராளமான நூல்களை வாசித்து, அக்கருத்துக்களை உள்வாங்கி, மிக மிக அருமையாக எழுதி உள்ளார். மார்க்சிய தத்துவ மேதைகளுள் ஒருவரான தோழர் அருணன் அவர்கள் எழுதிய இந்த நூல். இடதுசாரிகள் அனைவர் கைகளிலும், வீடுகளிலும் இருக்க வேண்டும். அமைப்பு சட்டதிட்டங்களில் ஏற்படும் பல மயக்கங்களுக்கு, இந்நூலில் விடையிருக்கிறது. இந்நூலை எளிய முறையில் வாசிப்பதற்காக பேருழைப்பைச் செலுத்திய அன்புத் தோழரை வணங்குகிறேன்.
– செ.தமிழ்ராஜ்
செ.தமிழ்ராஜ் அவர்களின் நூல் விமர்சனங்களைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%9A%E0%AF%86.%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D இந்த லிங்கை கிளிக் செய்யவும்
புத்தகம்: லெனின் வாழ்வும். சிந்தனையும்
எழுத்தாளர்: அருணன்
ஆண்டு : 2005
பக்கம் : 536
விலை ரூ.200
பதிப்பகம்: வசந்தம் வெளியீட்டகம்



