நூல் விமர்சனம்: திருகி எறிந்த முலை

தோழர் மதுரை பாலன் அவர்களை, முகநூல் வழியாக அவரது சுவாரசியமான பதிவுகளின் வழியே அறிந்திருக்கிறேன். சிறந்த பேச்சாளர் என்று தோழர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஒரு நாள் திடீரென கவிதை நூல் வெளியிடுகிறார் என்று செய்தி வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாகி விட்டது. அவர் கவிதை எழுதியது மாதிரி தெரியவில்லையே என்று யோசித்தேன். சரி பால்ய கால நினைவுகளாக இருக்கும் என்று விட்டு விட்டேன்.

நாகமலை கலை இரவில் சந்தித்தபோது புத்தகம் தந்தார். ஓரிரு நாட்களில் புத்தகத்தை வாசித்த போது வெட்கித்தேன். ஒரு நல்ல கவிஞரை சந்தேகப்பட்டு விட்டோமே என்று வருந்தினேன். மொத்தம் 77 கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் 7 கவிதைகள் இரண்டு முறை பதிவாகி இருக்கிறது. எனக்கு பிடித்த கவிதைகள் 20 இருந்தது. ஒரு நல்ல கவிதைத் தொகுப்பில் ஐந்தாறு கவிதைகள் இருந்தாலே சிறப்பு எனும் நிலையில், இருபது என்பது நல்ல எண்ணிக்கைதான் இனி கவிதைகளில் இருந்து,

மனிதனின் துயரத்தை பாடிவிட ஓராயிரம் சொற்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு நதியின் துயரத்தைப் பாட, இவர் போன்ற சமூகப் பார்வை உள்ள கவிஞர்களிடம் மட்டுமே ஆறுதலாய் சொற்கள் இருக்கின்றன. ஆற்றையும் ஆற்றுப்படுத்தும் கவிதை இதோ, நீர் நின்று கண்ணீர் சிந்திப் போகும் வரிகள்

வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
தத்தளிக்கிறது
நாக்கு வறண்டு போன நதி

எப்படி இப்படி என்று யோசிக்கும் விதமாக ஒரு கவிதை, நாமும் தான் நிழலில் நின்று இளைப்பாறுகிறோம். என்றாவது வெயிலில் நிற்கும் மரம் குறித்து யோசித்து இருக்கிறோமா? என்று தன்னைத் தானே நொந்து கொள்ளச் செய்து விடுகிறது இக்கவிதை,

நீ
நிழலில் நிற்கிறாய்
உனக்காக
ஒரு மரம்
வெயிலில் நிற்கிறது

அன்பையும், ஈரத்தையும், இணைப்பையும், பிணைப்பையும் பேசுகிறது இக்கவிதை. அடர்த்தியான நேசத்தின் முன், உலகே உருண்டு புரண்டாலும் ஒன்றும் பண்ண முடியாது என்று போதிக்கிறது.

தன்னிடம்
ஆழமாக வேரூன்றி விட்ட மரத்தை
எந்தப் புயலுக்கும்
விட்டுக் கொடுக்காது
மண்

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கவிதை. இது யாருக்காக சொன்னாலும், அதன் உண்மையை ரசிக்கத் தான் வேண்டும். நாமும் எத்தனை பேர் தலையில் குப்பைகளைக் கொட்டியிருக்கிறோம் என்று வருந்தினேன். அதற்காக திருந்தி விட்டேன் என்று எண்ண வேண்டாம், அளவோடு கொட்டுவேன் என்று கூறிக் கொண்டு, அந்தக் கவிதையை உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன்.

இது
மனிதனின் தலை
தயவு செய்து
இங்கு யாரும்
குப்பைகளை
கொட்டாதீர்கள்

மதுரை பாலன் அவர்களின் கவிதைகள் பெரும்பாலும், ஜென் மன நிலையில் நின்று எழுதப்பட்டது. அவரையறியாமல் அவருக்குள் ஓடும் சிந்தனைகள், தத்துவங்கள், உரைகள் யாவும் கவி வேடம் தரித்து உலவுகின்றன. ஒரு மனிதர் பல்துறை வித்தகராக இருக்கும் போது இம்மாதிரியான பரிசோதனை முயற்சிகள் தவிர்க்க இயலாதது. என்னுரையில் கவிதை குறித்தான தன்னிலை விளக்கமாக ஒரு உண்மையை சொல்லியிருக்கிறார். அதைப் பொய்யாக்கியிருக்கின்றன இவரது கவிதைகள். ஆனால், ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். இதில் உள்ள கவிதைகளை மட்டும் தயவு தாட்சண்யம் பாராமல் பிரித்து எடுத்தால், சிறந்த கவிதைத் தொகுப்பாக மாற்றி விடலாம். எழுத்தாளர் பதிப்பாளர் ஸ்ரீ ரசா அவர்கள் அதை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

இளமை முறுக்கில் எழுதப்பட்ட, காதல் ரசம் சொட்டும் கவிதைகள் இருக்கின்றன. தோழரது இளமை வேகம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. கவியுலகில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அனைவரும் வாங்கி வாசியுங்கள். ஒரு இளங் கவியின் கவி வாழ்வில் சுடர் ஏற்றுங்கள் அன்புத் தோழருக்கு வாழ்த்துகள்.
செ.தமிழ்ராஜ்

திருகி எறிந்த முலை
(கவிதைகள்)
மதுரை பாலன்
ஆண்டு: 2026
பக்கம்: 88
விலை ரூ.140
பதிப்பகம்: காலம் வெளியீடு

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *