
தமிழ்நாடு முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை கூடுகிறது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் மே 10-ம் தேதி விஜய் முதலமைச்சரானார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
இதில், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சியினரும் அமைச்சர்களாகியுள்ளனர். இதையடுத்து மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 5) கூடுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது அணை விவகாரம், டாஸ்மாக் கடைகள், கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



