வங்கி மேலாளருக்கு பளார்… மு.க.அழகிரி மகள் மீது வழக்குப்பதிவு

சென்னையில் வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் அழகிரி. இவர் திமுகவில் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், கட்சி பணிகளில் இருந்து ஒதுக்கியிருக்கிறார். இவரது மகள் கயல்விழி. சென்னை அடையாறு பகுதியில் எஸ்பிஐ வங்கி செயல்படும் கட்டிடத்தின் உரிமையாளராக கயல்விழி உள்ளார். இந்த கட்டிடத்தில் லிப்ட் பழுதாகியிருந்துள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கை தொடர்பு கொண்டு கயல்விழி பேசியுள்ளார். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அடையாறில் இருக்கும் வங்கிக்கு வந்த கயல்விழி, லிஃப்ட் வேலை செய்யாதது குறித்து வங்கி மேலாளரிடம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கை கயல்விழி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வங்கியின் பிசினஸ் ஆபீஸ் தலைமை மேலாளர் நமச்சிவாயம் போலீஸில் புகார் செய்தார். அதில், வங்கி கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்திருந்தது. அதை சரிசெய்யுமாறு கயல்விழியின் பிரதிநிதியை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழியிடம் தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கிக் கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை ஆபாசமாக திட்டியதுடன், அவரை தாக்கி, மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *