
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது தூத்துக்குடி எஸ்.பி.அலுவலகத்தில் தவெக புகார் மனு அளித்துள்ளது.
கடந்த 8-ம் தேதி தூத்துக்குடியில் ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூடடத்தில் பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர், “ விசுவாசம் என்றால் என்ன தெரியுமா, கொடி பறக்கும்போது கைதட்டுவது அல்ல. அந்தக் கொடி பறப்பதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அந்தக் கையை எடுத்துவிட்டு கொடியை பறக்க விடுவதுதான் விசுவாசம். அதிமுகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்கிறான். அதிமுகவை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது தண்ணியாவது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசியது என்று தவெகவினர் கேட்கிறார்கள்” என்று பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக மாவட்ட தவெக பொருளாளர் அருண்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், “ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக முதலமைச்சர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். இது தவெக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவதூறு கருத்துகளை அவர் தெரிவிக்காத வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஏற்கெனவே முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் மீது தவெக அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதும் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசினார் என்று தவெக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



