கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது தில்லு முல்லு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு கடன் தள்ளுபடி என தவெக மிகப்பெரிய தில்லு முல்லுவில் ஈடுபட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெற்றிருக்கும் குறு விவசாயிகளுக்கு முழுவதுமாக கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்’ என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை. எனது தலைமையிலான அதிமுக அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.

ஆனால், இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் ‘ 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று! மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை.சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *