
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக ஜோதிமணி எம்.பி புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கரூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. கட்சிக்கு நீண்ட காலம் பணியாற்றியவர்கள், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலும் புறக்கணித்துவிட்டு வெற்றி வாய்ப்பில்லாத புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் சிலர் கட்சியில் இருந்து விலகுகின்றனர்.
இவர்களுக்கு எந்த அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது, அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வேட்பாளர் மற்றும் தொகுதி தேர்வில் ஈடுபட்ட கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைமை விசாரணை நடத்த வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை மிக அருகில் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வெளிப்படையாக தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.



