கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மாமனார் குத்திக்கொலை

நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணவர், நான்கு மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் தனது குழந்தைகளுடன் மாமானார் வீட்டில் அந்த பெண் வசித்து வந்துள்ளார். அவருக்கு வயது 28 ஆகிறது.

இந்த நிலையில், அந்த பெண்ணின் மாமியார் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த பெண்ணிடம் ஆபாசமான செய்கைகளையும் மாமனார் காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம், அவரது மாமனார் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த பெண், சமையலறையில் இருந்த கத்தியால் மாமனாரை குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மாமனார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அந்த பெண்ணின் நாத்தனாரும், சகோதரிகளும் சங்கர் நகர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து வந்தனர். விரைந்து வந்த போலீஸார், கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது, தனது மாமினார் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வீட்டில் ஆளில்லாத போது தவறாக நடக்க முயன்றதால், சமையலறையில் இருந்த கத்தியால் குத்தியதாகவும், ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *