
மனிதக் கழிவுகளை மனிதர் அள்ளும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர் பல்ராம் சிங் அவர்கள் நீதிமன்றத்தில் மனிதக் கழிவுகளை மனிதர் அள்ளும் கொடுமை குறித்து பொதுநல வழக்கு 2023-ல் தொடர்ந்தார். அதில் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க டெல்லி, உத்தரப்பிரதேசம், பிஹார், தமிழ்நாடு. கர்நாடகா உள்ளிட்ட 15 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் பல மாநிலங்கள் முறையான, உரிய பதிலளிக்கவில்லை என்று நேற்று( 27.07.2026) உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கு.ஜக்கையன்
நீதியரசர்கள் அரவிந்த் குமார், வி.எம்.பாஞ்சோலி ஆகியோர் அமர்வு தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநில தலைமைச் செயலாளர்கள மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். நம் இந்திய நாடு அணு ஆயுத சோதனை, ஏவுகணைகள் வீச்சில் சாதனை என நாள் தோறும் விஞ்ஞான வளர்ச்சியில் வெற்றி நடைபோடுவதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிற அதே வேளையில் மனிதர் கழிவை மனிதரே அள்ளிச் சுமக்கும் கொடுமைக்கு ஏன் இன்னமும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை?
அமெரிக்கா, சீனா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த முறை முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ள போது நம் நாட்டில் மட்டும் ஏன் முடியவில்லை? ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஏன் இதற்கான முயற்சிகளில் முழு வீச்சாக இயங்கவில்லை? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் நிற்கிறது. இதற்காக அடிப்படை காரணம், நாம் நாட்டில் இருக்கின்ற சாதிய அமைப்பு முறைதான். குறிப்பிட்ட பட்டியல் சாதியினரே காலங்காலமாக இந்த நவீன கொத்தடிமை முறையில் மீள முடியாத துயரில் இருக்கின்றனர்.
ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாதம் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற சட்டம் சட்டம் கொண்டு வரப்பட்டால் உடனுக்குடன் புதிது புதிதாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும். ஆனால், எந்த மனிதரும் இந்த இழித்தொழிலை செய்யக்கூடாது என்பதே ஆதித்தமிழர் கட்சியின் நிலைப்பாடு.
ஆகவே இனிமேலாவது ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் மனிதர் கழிவை மனிதர் அள்ளும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், மலக்குழிக்குள் ஏற்படும் விஷவாயு மரணங்களைத் தடுத்திட உறுதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



