
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்றாலும், அரசியல் தலைநகரம் மதுரை தான். கட்சி துவங்குவதில் இருந்து ஊர்வலம், பேரணி என தலைவர்கள் திட்டமிடும் நகரமாக மதுரை இருந்துள்ளது. அதற்குக் காரணம் அரசியல் விழிப்புணர்வு தான். மதுரை நகரில் ஏராளமான படிப்பங்கள் இருந்தன. அங்கு வரக்கூடிய நாளிதழ்கள், கட்சி பிரசுரங்கள், உரையாடல்கள் அரசியல் பயிற்சி வகுப்புகள் போல நடக்கும். மதுரை நகரில் அதிக படிப்பகம் கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.
கே.பி.ஜானகி அம்மாள் படிப்பகம், தூக்குமேடை பாலு படிப்பகம், சர்க்கரை செட்டியார் படிப்பகம், நெல்சன் மண்டேலா படிப்பகம், பாட்ரிஸ் லுமும்பா படிப்பகம், காஸ்ட்ரோ படிப்பகம், பி.ராமமூர்த்தி படிப்பகம் என நிறைய இருந்தன. இங்கு அரசியல் கட்சி கற்று எம்.பி, எம்எல்ஏ ஆனவர்கள் உண்டு. இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் படிப்பகம் நடத்திய கட்சி திமுக தான். அண்ணா படிப்பகம், முத்துவேலர் படிப்பகம், மேயர் முத்து படிப்பகம், கூடலூர் ராஜாங்கம் படிப்பகம், சிறுகதை மன்னன் தென்னரசு படிப்பகம், சிந்தனைச் சிற்பி சிற்றரசு படிப்பகம் என படிப்பகம் இயங்கின. ஞாயிற்றுக் கிழமைகளில் படிப்பகங்களில் கூட்டம் அலைமோதும்.
இப்படியான சில மன்றங்களில் ஒலிபெருக்கி குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோ.புதூரில் கூடலூர் ராஜாங்கம் படிப்பகத்திற்கு அருகில், கே.பி.ஜானகியம்மாள் படிப்பகம் இருந்தது. டான்சியில் வேலை செய்த சுப்பையா என்பவர், கூடலூர் ராஜாங்கம் படிப்பகத்திற்கு வந்தால், முதல் வேலையாக பாடலை ஒலிக்கச் செய்வார்.
கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா பாடல் ஒலிக்கும். திமுகவின் கொள்கை பாடலான இந்த பாடலை எழுதியவர் தான்,
அம்பிகையே துர்க்கையே
ஆதிபராசக்தியே
நம்பி உன்னைத் தொழுது வந்தால்
நாளும் உண்டு மேன்மையே….
என்ற குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பி.சுசீலா பாடிய பக்தி மணம் கமழும் பாடலையும் எழுதினார். அவர் பெயர் கீழப்பூங்குடி முருகவேல் காந்தி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பாடலாசிரியர், அறிஞர் அண்ணாவின் மீது கொண்ட பற்றால் தனது பெயரை பூவை செங்குட்டுவன் என்று மாற்றிக் கொண்டார். அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற தம்பி தவறி விட்டான் என்ற நாடகத்தை நடத்தியவர். பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்த பூவை செங்குட்டுவன் திமுகவுக்கு நாடகங்கள் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய நாடகங்களில் மு.க.முத்து. மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடித்துள்ளனர். தீவிர நாத்திக கொள்கையின் பிடிப்பில் இருந்த பூவை செங்குட்டுவன் பின்னாளில், இறைபக்தியாளனாக மாறினார். நாடகங்கள் மட்டுமின்றி பாடல்கள் எழுதும் பழக்கம் உள்ள பூவை செங்குட்டுவன், குன்னக்குடி வைத்தியநாதனுக்காக வானொலிக்காக ஒரு பாடலை எழுதினார்.
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது
எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்
உன்திருப்புகழ் பாடியே கடலாடும்…
என்ற அந்த பாடல் பின்னாளில், கந்தன் கருணை படத்தில் இடம் பெற்றது. கவியரசர் கண்ணதாசனால் கே.வி.மகாதேவன் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமான பூவை செங்குட்டுவன் திரைப்படங்களில் எழுதிய அனைத்துப் பக்திப் பாடல்களும் புகழ் பெற்றவை. தாயிற் சிறந்த கோயிலுமில்லை, ஏடு தந்தானடி தில்லையிலே, இறைவன் படைத்த உலகை, முத்தமிழில் பாடவந்தேன், திருப்புகழைப் பாடப் பாட., ஆடுகின்றானடி தில்லையிலே, போன்ற பாடல்களையும் எழுதினார். திமுகவின் கொள்கை பாடலை எழுதிய பூவை செங்குட்டுவன் தான், எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை…
என்ற பாடலையும் எழுதினார்.
கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
கோவிலென்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளமென்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை
என்று அந்த பாடலில் எம்.ஜி.ஆரின் கொள்கை முழக்கத்தை எழுதி வைத்தார். ஆனால், இந்த பாடலை கவிஞர் வாலி எழுதினார் என்றே எம்.ஜி.ஆர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல் என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூற, எம்.ஜி.ஆர் அசந்து போய் உள்ளார். திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பூவை செங்குட்டுவன், கலைமாமணி உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இசை மேதை எம்.பி.சீனிவாசன்
இடதுசாரிகளின் திரைப்பயணத்தில் வெற்றி பெறாத முயற்சியாய் மாறிய படம் தாகம். பாபு நந்தன்கோடு இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளிவந்த தாகம் படத்தில் முத்துராமன், நந்திதா போஸ், பண்டரிபாய், சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்தனர். திரைப்பட விழாக்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படத்திற்கு இசை மேதை எம்.பி.சீனிவாசன் இசையமைத்தார். இப்படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய இந்த பாடல், இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளில்லை என்று கூறலாம். சேர்ந்திசை என்ற வடிவத்தை தமிழ் சினிமாவிற்கு கொடையாக வழங்கிய எம்.பி.சீனிவாசன், தாகம் படத்திற்காக எஸ்.ஜானகி மற்றும் குழுவினர் பாடிய இந்த பாடலிலும் சேர்ந்திசையை அற்புதமாக பயன்படுத்தியிருப்பார்.
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
மலைகளிலே பிறப்பதற்கு அருவி என்று பேரு
அது மண்ணில் வந்து தவழும் போது ஆறு என்று பேரு
கொடிகளிலே பிறப்பதற்கு மலர்கள் என்று பேரு
மனித இனத்தில் பிறப்பதற்கு? ….
மனித இனத்தில் பிறப்பதற்கு குழந்தை என்று பேரு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
தேன் பிறந்தது மலரிலே மீன் பிறந்தது நீரிலே
இயற்கை அன்னை பெற்ற தாயே…
இயற்கை அன்னையே பெற்ற தாயே……
எந்த நாளும் சொந்தம் நீயே
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு உயிர்கள் நமது உறவு
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
வானம் நமது தந்தை பூமி நமது அன்னை
கேள்வியும், பதிலுமாக அமைந்த ,இப்பாடலை பூவை செங்குட்டுவன் எழுதினார். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஆகியோருக்கு பாடல் எழுதிய பூவை செங்குட்டுவன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் பாடல் எழுதியுள்ளார் என்பது முக்கியமான விஷயமாகும். 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தனது பாதுகாவலர்களால் புதுடெல்லியில் உள்ள சப்தர்ஜங் தெருவில் உள்ள வீட்டில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் அன்னை இந்திரா அஞ்சலி என்ற இசைத்தட்டை வெளியிட்டார். அவரே இசையமைத்து பாடிய இந்த இசைத்தட்டில் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல், தமிழக வீதிகள் முழுவதும் ஒலித்தது.
சுதந்திர பாரத பூமியிலே ஒரு சுற்றுப்பயணம் ஓய்ந்தது…
அன்னை இந்திரா பாதையிலே செல்லும் நமது எண்ணங்களே
அன்னையே பாரதம் இந்திரா அன்னையே பாரதம்…
எத்தனை மொழிகள் எத்தனை இனங்கள் எல்லாம் ஓரினமே…
எம்மதமாயினும் சம்மதம் என்று ஏற்கும் அவர் மனமே
அன்னையே பாரதம் இந்திரா அன்னையே பாரதம்…
அஞ்சா நெஞ்சமும் அன்பும் கொண்டது அன்னையின் வடிவாகும்
சரித்திர சாலையில் நிறுத்திய மாளிகை அன்னையின் புகழாகும்
அன்னையே பாரதம் இந்திரா அன்னையே பாரதம்…
சுதந்திர ஜோதியில் சுயநலவாதிகள் குளிர்காய்வதை தடுப்போம்…
பெற்ற சுதந்திரம் என்றும் நிரந்தரமா என்று அன்னையின் வழி நடப்போம்
அன்னையே பாரதம் இந்திரா அன்னையே பாரதம்…
என்ற அந்த பாடல், இந்திரா காந்திக்கு பூவை செங்குட்டுவன் எழுதிய இரங்கற்பாவாகும். எத்தனையோ கடவுளர்கள் இருந்தாலும், முருகனைப் பற்றி பூவை செங்குட்டுவன் எழுதிய தனிப்பாடல்கள் அரை நூற்றாண்டுகளாக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் இசை உலகில் தனித்த அடையாளங்களில் ஒருவர் தாராபுரம் சுந்தராஜன். அவரது இசையில் அம்மையும் பிள்ளையும் என்ற பக்தி இசை ஆல்பத்தில் இடம் பெற்ற பத்து பாடல்களையும் பூவை செங்குட்டுவன் தான் எழுதினார். காமாட்சி தேவியவள், அன்னை முத்துமாரியம்மன், ஆயிரமாயிரம் திருநாமம், கண்ணீர் சிந்தி ஆகிய பாடல்களை உமா ரமணன் பாடியுள்ளார். மயிலாடி, முருகனெங்கே, தித்திருக்கும் அமுது,- தாராபுரம், எண்ணும் பொழுதில், திருக்கரத்தில் ஆகிய பாடல்களை தாராபுரம் சுந்தராஜன் பாடியுள்ளார். மகரதமணியே என்ற பாடலை தாராபுரம் சுந்தராஜனுடன் இணைந்து பி.தேவி பாடியுள்ளார். யூடியூப்பில் இந்த பாடல்கள் கேட்க கிடைக்கின்றன. இலக்கியச் சுவையுடன் பக்தி பாடல்களை எழுத முடியும் என்று பூவை செங்குட்டுவன் நிரூபித்திருப்பார்.

கவியரசர் கண்ணதாசன் விருது பெற்ற பூவை செங்குட்டுவன்.
இசைமாமணி பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜ,ன் பாடிய பல புகழ்பெற்ற பாடல்களை பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே..
முன்னின்று காக்கும் இறைவனுக்கே..
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
பிரபல இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி இசையில் உருவான இந்த பாடல் பூவை செங்குட்டுவன் கற்பனையில் உருவானது தான். ஒரு வரியுடன் அடுத்தடுத்த அடியை இணைத்து பாடுவதில் சீர்காழி கோவிந்தராஜன் கில்லாடி. அப்படி உருவான ஒரு பக்தி பாடல் இது. டி.ஆர்.பாப்பா இசையமைப்பில் உருவான இந்த பாடலையும் எழுதியது பூவை செங்குட்டுவன் தான்.
வேலில் இருப்பது வெற்றி முனை
வேலில் இருப்பது வெற்றி முனை- எந்த நாளும்
தொழுவோர்க்கு நல்ல துணை- வடி
வேலில் இருப்பது வெற்றி முனை- எந்த நாளும்
தொழுவோர்க்கு நல்ல துணை- வடி
வேலில் இருப்பது வெற்றி முனை.
இந்த பாடல் முழுவதும் வேலின் பெருமையைப் பற்றி செங்குட்டுவன் பட்டியலிடுவார். இதில் அவரின் சந்தக்கவி வரிகள் கேட்போரை மெய்மறக்க வைக்கும். வாழ்வில் அருள் கூட வண்ண மயிலோடு வள்ளி தெய்வானை கொண்டாடும்- முருகன் கை வேலில் இருப்பது வெற்றி முனை என்று எழுதியிருப்பார். சீர்காழி கோவிந்தராஜன் குரலில் முருகனின் திருவிளையாடலை
பாலமுருகன் விளையாடல்
என் பாடல் எல்லாம் அவன் பாடல்
முழுமையான அழகில் எல்லாம்
முருகவேலின் முகச்சாயல்…
என்று எழுதியிருப்பார். மெல்லிசை மாமணி வி.குமார் இந்த பாடலுக்கு இசை மீட்டியிருப்பார். கர்நாடக இசை மேடைகளிலும் புகழ்பெற்ற இரட்டையர்களான தேரழுந்தூர் சகோதரிகள் என்று புகழப்பட்ட ராதா, ஜெயலட்சுமி ஆகியோர் குரல்களில் பூவை செங்குட்டுவனின் பாடல்கள் புது அனுபவம் என்றே சொல்லலாம். நான்முகி பூரணி நாராயணி நாதம் நீ வேதம் நீ என்று செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு குன்னகுடி வைத்தியநாதன் இசையில் தேரழுந்தூர் சகோதரிகள் பாடும் மிடுக்கே பாடலை ரசிக்க வைக்கும்.

பி.சுசீலாவின் பக்திப் பாடல்கள் இல்லாமல் நவராத்திரி பண்டிகையை நிறைவடையாது என்றே சொல்லலாம். பூவை செங்குட்டுவன் எழுதி அவர் பாடிய
சங்கீத ஸ்வரங்களின் தாயே
சகலகலாவல்லி நீயே
கலைமகளே கலையின்
தலைமகளே உலகில்
கலைநயம் யாவும் உன் அருள்மயமே..
என்ற பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். வீணையின் நாதமும் பி.சுசீலாவின் குரலும் சரஸ்வதி தேவியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் வரிகளை எழுதியிருப்பார் பூவை செங்குட்டுவன். தென்னிந்தியத் திரைப்பட இசையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் திருமால் சரணம் என்ற ஒலிநாடாவில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் பூவை செங்குட்டுவன் தான் எழுதினார். திரையிசையில் மட்டுமல்ல பக்தியிசையிலும் தனது தடத்தை அழுத்தமாக பதித்தவர் பூவை செங்குட்டுவன் என்பது மறக்க முடியாத உண்மை.
– ப.கவிதா குமார் ( நினைவுகள் சுழலும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்



