பாரதிராஜாவுக்கு பிரியா விடை… 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

பாரதிராஜா உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, இளையராஜா, ராதிகா உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 9 மணி அளவில் பாரதிராஜா உடல், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், வத்தலகுண்டு காட்ரோடு அருகே உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாரதிராஜாவின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து இன்று (ஜூன் 11)அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பாரதிராஜா குடும்பத்தினர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதது. தமிழ்நாடு அரசு சார்பில் வன்னி அரசு, நிர்மல்குமார் ஆகிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். காவல் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *