பழநிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி: பின்னியெடுத்த திமுக!

பழநிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி என்று திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோயில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது.

கடந்த 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலையை அடுத்த பாப்பாகுளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி அடுத்த டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் 5 பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பழநி கோயில் நிலமோசடி தொடர்பாக மிகப்பெரிய சதி நடந்துள்ளது என்றும் குற்றவாளியை மறைக்க முயற்சி நடப்பதாகவும் திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழநி நில மோசடி விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம் ஏற்புடையதல்ல. திட்டமிட்ட சதி நடந்துள்ளது. தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?

பழநிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழநிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி. முறைகேடான அந்த நிலப்பதிவைக் கூட நீதிமன்றம்தான் ரத்து செய்தது, தவெக அரசு செய்யவில்லை.. சமூக வலைதளத்தில் பேசியவர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், நிலத்தை விற்றவர்களை, வாங்கியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

பழநி கோயில் நில விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத் துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதனால் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பழநிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவைத்து முறைகேடு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய்க்கு தெரிந்துதான் இந்த நிலம் சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு தெரியவில்லை என்றால் முதலமைச்சர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *