
அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார் அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பரிந்துரையின் பேரில் லஞ்சம் பெறப்பட்டதாக தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக துணை அமைப்புச் செயலாளருமான தாயகம் கவி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
அப்புகார் மனுவில், ” தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொள்ளும் வழக்கறிஞர் லெனின் ஜெயபாலன், அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம், அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பெயரையும் அவரது ஆதரவையும் பயன்படுத்தி, இந்த நியமனங்கள் அனைத்தும் அவரது அதிகாரத்தின் கீழ் தான் ஒதுக்கப்படுகின்றன என்று கூறி முறையற்ற வகையில் தொடர்ந்து பணம் கோரி வசூலித்து வருவதாக எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இதேபோல், மதுரையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் பார்த்திபன், லெனின் ஜெயபாலனுடன் கூட்டுச் சேர்ந்து, இந்த நியமனங்கள் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மூலமாகவே கட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன என்று கூறி விண்ணப்பதாரர்களிடம் பணம் வசூலித்து வருகிறார்.
இடைத்தரகர்களின் இந்தச் செயல்பாடு ஏதோ ஒரு தனிப்பட்ட அல்லது தற்செயலான நிகழ்வு அல்ல. வெவ்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட வசூல் முகவர்கள், பணம் கோருவதற்கு ஒரே அமைச்சரின் பெயரையும், மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பெயரையும் தொடர்ந்து பயன்படுத்துவது, அமைச்சரின் அலுவலகங்கள் இந்த நியமனங்களுக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்படுகின்றன அல்லது பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன என்பதற்கான வலுவான சூழ்நிலை ஆதாரமாகும்.
லெனின் ஜெயபாலன், பார்த்திபன் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களால் வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயின் பணப் பரிவர்த்தனையையும் (வங்கி கணக்குகள், ரொக்கப் புழக்கம், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் பணம் கொடுத்த வேட்பாளர்களின் சாட்சியங்கள் மூலம்) தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விரிவாகக் கண்டறிய வேண்டும். இந்தத் தொகைகள் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரைச் சென்றடைந்ததா, அவர்களுக்குப் பலனளித்ததா அல்லது அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விநியோகிக்கப்பட்டதா என்பதைத் தீர்க்கமாக நிறுவி, இந்தச் சங்கிலித்தொடரில் உள்ள ஒவ்வொரு நபரையும் விதிவிலக்கின்றி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவை ஏதோ தனித்தனியாக மாவட்ட அளவில் நடந்த தவறுகள் அல்ல. விழுப்புரம், திருப்பத்தூர், மதுரை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரே மாதிரியான முறைகேட்டு நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளன. அதாவது அரசியல் ஆதரவைக் காட்டி இடைத்தரகர்கள் மூலம் பணம் கைமாறுகிறது; பணம் கொடுக்காத தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் அமைதியாக நிராகரிக்கப்படுகின்றன.
வெவ்வேறு மாவட்டங்களில் காணப்படும் இந்த ஒரே மாதிரியான முறை, இது அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரின் அரசியல் ஆதரவுடன் மாநிலம் தழுவி ஒருங்கிணைந்து நடத்தப்படும் சட்டவிரோதப் பண வசூல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத் திட்டம் என்பதற்கான சான்றாகும். எனவே, இதனைத் தனித்தனி மாவட்டப் புகார்களாகப் பார்க்காமல், ஒரு கூட்டுச் சதித் திட்டமாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த், அமைச்சர், சி.டி.ஆர். நிர்மல் குமார், லெனின் ஜெயபாலன், பார்த்திபன், விஜயகாந்த், தபா சிவன் மற்றும் சட்டவிரோதப் பணவசூலில் ஈடுபட்டுள்ள பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத இதர நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
இப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தங்கள் பெயர்களில் பணம் வசூலிக்கப்பட்டதை அனுமதித்த, அறிந்திருந்த அல்லது அதன் மூலம் பயனடைந்த மேற்கண்ட அமைச்சர்களிடம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித தயக்கமுமின்றி விரிவான விசாரணை நடத்தி, வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின் இறுதி இலக்கையும் பயனாளியையும் கண்டறிய வேண்டும்” என்று மனுவில் என்று தாயகம் கவி குறிப்பிட்டுள்ளார்.



