
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 1989 ஜூலை 16ம் தேதி டாக்டர் ராமதாஸால் தொடங்கப்பட்டது இந்த கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படட்து. வன்னியர் வாக்குகளை குறிவைத்து பல்வேறு போராட்டங்களை இந்த கட்சி நடத்தியது. பல ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தனித்தும் போட்டியிட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ்க்கு உதவியாக அவரின் மகன் அன்புமணி அரசியலுக்கு வந்தார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே பிரச்னை இருந்து வந்தது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை டாக்டர் ராமதாஸ் அறிவித்த போது, அதற்கு மேடையிலேயே அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு பாமக இரண்டு குழுக்களாக செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்குவதாக அறிவித்தார். ஆனால், கட்சி விதிகளின்படி தான் தலைவர் என அன்புமணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
அப்போது கட்சி சின்னம் கோரி இரண்டு தரப்பினரும் நீதிமன்றங்களை நாடினர். இந்த நிலையில், அன்புமணி தான் பாமக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கட்சி சின்னத்தை கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது அவருக்கு ஒதுக்கியது. சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ,டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.அத்துடன் அரசியலை இனி தனது மகனும், மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸின் இந்த அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



