
நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக கௌதமி அறிமுகமானார். அதன் பின் கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், ராமராஜன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சுமார் 25 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் கடந்த 2023-ம் ஆண்டு மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கௌதமி புகார் செய்தார். இந்த புகாரில், தனது சொத்துக்களை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். அழகப்பனும், அவரது மனைவி நச்சம்மாள் மற்றும் குடும்பத்தினர் போலி ஆவணங்கள் தயாரித்து தனது சொத்துக்களை மாற்றி மோசடி செய்ததாக கௌதமி புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அழகப்பன், அவரது மனைவி நச்சம்மாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றது கண்டறியப்பட்டதால் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தது.
நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை மையமாக வைத்து, சென்னையில் அண்ணாநகர், வானகரம், வேளச்சேரி மற்றும் மதுரையில் அழகப்பன் நகர் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று (ஜூன் 17) அதிரடி சோதனையை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



