டெட் தேர்வில் ஆசிரியர்களுக்கு விலக்கு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

கடந்த 2009-ம் ஆண்டு இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி, பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற 2 வருடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், ஓய்வு பெறுவதற்கு 5 வருடங்கள் கால அவகாசம் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் 2010-ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் முந்தைய அரசு, சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வை நடத்த முடிவெடுத்தது. மேலும், தகுதி மதிப்பெண்களையும் வகுப்பு அடிப்படையில் குறைத்தது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டெட் தேர்வும் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அதற்கான கால அவகாசத்தை 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரிய தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2010-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று(ஆக.25) முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தை பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்லசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் ஆகியோர் ஆதரித்தனர்.

இதுகுறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ வேலு பேசுவையில், “ஆசிரியருக்கு கிடைக்கப்பெறும் பணி பலன்கள் மற்றும் பதவி உயர்வு உரிய முறையில் கிடைக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்துவார்கள். ஆசிரியர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் சட்டங்களுக்கு திமுக என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று தீர்மானத்திற்கு ஆதரவை தெரிவித்தார்.

இதன் மூலம் அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த தனித் தீர்மானம் பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *