
முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் , ஆத்தூரில் ஜூன் 20-ம் தேதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆத்தூர் காவல் நிலையத்தில் தவெக நகர செயலாளர் செல்வம் புகார் செய்தார்.
இதன் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்யச்சென்ற போது அவரை போலீஸார் கைது செய்தனர். அனிதா ராதாகிருஷ்ணன் கைது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.



