கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை… தமுஎகச கோரிக்கை ஏற்பு

கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மூத்த படைப்பாளியும், தமிழ் இலக்கிய உலகின் மதிப்புமிகு அடையாளங்களில் ஒருவருமான கவிஞர் புவியரசு கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர். கோவையில் அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இரண்டு முறை சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு அவர்களை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, “சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், ழுத்தாளருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு.

‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *