
தேர்தல் வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிராக, திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர், வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ், கொடுங்கையூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் ஆகிய வாக்காளர்கள் என மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் தகவல் மறைப்பு, தேர்தல் செலவு விதிகளை மீறியது மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருந்தனர்.
இந்த நான்கு வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது. இதே போல, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 3 வாரத்தில் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் அடங்கிய தேர்தல் வழக்குகள் தொடரும்போது தாக்கல் செய்யப்பட வேண்டிய படிவம் 25-ஐ பூர்த்தி செய்து தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.



