முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

தேர்தல் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதுபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதே போல வில்லிவாக்கம் தொகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெற்ற வெற்றியை எதிர்த்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று (ஆக.25) விசாரணைக்கு வந்தது. அப்போது முதலமைச்சர் விஜய் சார்பில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி,“ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்துக்குள் முடிக்க வேண்டும். கடந்த முறையே வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யக்கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருந்தேன். இந்த முறையும் அவகாசம் கேட்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.

ஆதவ் அர்ஜுனா சார்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்த நீதிபதி இரண்டு வார கால அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, ஒரு நாள் மட்டும் அவகாசம் வழங்கினார். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *