
டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தவெக அரசால் ‘மூடப்பட்டதாக’ அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பலவும் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழும் நிலையில், டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டியலை வெளியிடாமல் சப்பைக் கட்டுக் கட்டியுள்ளது மாற்று சக்தி அரசு.
ஆனால், ஊனால் ஆய்வு என்று குதிப்பது, முறுக்கு பாக்கெட்டின் உற்பத்தி தேதிக்கு ஆதாரம் கேட்பது என ‘விஞ்ஞான’ ரீதியாக ஆட்சி செய்யும் தவெக ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகள் மூடல் விஷயத்தில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன்? மடியில் கனமில்லையெனில் பயமேன்? தூய சக்தி என முழங்கிவிட்டு, உண்மையை வெளியிடத் தயங்கலாமா?
எனவே, மேன்மேலும் காலந்தாழ்த்துவதை விடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை மீண்டும் வலியுறுத்துகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.



