
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால், இனி நாங்களும் பேச வேண்டி வரும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஜூலை 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக கடந்த 4- ம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் வைகோவின் பேச்சை வைத்துப் புகார் கொடுத்துள்ளோம். அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது வெளிப்படையாகச் செய்தியாளர்கள் சந்திப்பில், என்னை தவெகவுக்கு வருமாறு அழைத்தார்கள். அதனால் நான் வந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். இவையெல்லாம் குதிரை பேர ஊழலுக்குத் தகுந்த ஆதாரங்கள் எனச் சுட்டிக்காட்டும் வகையில் திமுக சார்பில் ஆளுநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
இது குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். கரூரில் தவெகதலைவர் விஜய் பேசியது உண்மைக்கு மாறாகவும், கரூர் வழக்கை பாதிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது என்பதை சிபிஐயிடமும், கரூர் வழக்கைக் கண்காணிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதியிடமும் மனுவாகக் கொடுத்துள்ளோம்.
விஜய் உண்மைக்கு மாறாகத்தான் பேசி வருகிறார். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் ‘கொத்து பரோட்டா’ என விஜய் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி இன்று தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார். ‘விஜயபாஸ்கர்கள் அதிமுகவில் போய் தவெகவில் சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்’ என்று பேசியிருக்கிறார். விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால், இனி நாங்களும் பேச வேண்டி வரும் ” என்றார்.



