கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை விவகாரம்: உதயநிதி கிளப்பிய பகீர்

கர்நாடகாவில் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெளிவாகச் சொல்கிறது என்று உதயநிதி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினார். அப்போது, “கர்நாடக மாநிலத்தில் ஹானூர் வனப்பகுதி அருகே அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார் ஆகியோர் அந்த மாநில வனத்துறையால் கடந்த 15-ஆம் தேதி அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக அவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த மூன்று தமிழர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மூவரும் சித்ரவதை செய்யப்பட்டு, மிக அருகில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பிரேதப் பரிசோதனை மூலமாகத் தெரியவந்துள்ளது. மூன்று பேருக்கும் உடல் முழுவதும் படுகாயங்கள் இருந்துள்ளன; விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கை தெளிவாகச் சொல்கிறது.

எனவே, இது முழுக்க முழுக்க ஒரு படுகொலை. இந்தப் படுகொலைக்கு எதிராக இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்சம் அந்த மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறதா? கடந்த வாரம் கர்நாடக முதலமைச்சர், தென் மண்டல மாநாட்டிற்காக இங்கு வந்தபோது, நேரிலாவது தமிழக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறதா?

கர்நாடக மாநிலக் காவல்துறையின் விசாரணைக்குப் பதிலாக ஒரு உயர்மட்ட நீதி விசாரணை நடத்த தமிழ்நாடு வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்த அவையில் வலியுறுத்தியுள்ளேன். அது குறித்து அந்த மாநில முதலமைச்சருக்கு ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிரச்னை நடந்தவுடன் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ கர்நாடகா சென்று இறந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மூன்று தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்கத் தமிழக அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான நிதி உதவியையும் சட்ட உதவியையும் இந்த அரசு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *