குதிரை பேர அரசியலை காங்கிரஸார் நியாயப்படுத்தினால் தவறு: ஜோதிமணி எம்.பி விமர்சனம்

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என்று ஜோதிமணி எம்.பி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் நேற்று (மே 25) சந்தித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதங்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தவெகவில் இணைந்தனர். இதனை குதிரை பேரம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இது தொடர்பாக ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,, “தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யை முதலமைச்சராக்கியுள்ளார்கள். அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தை தர வேண்டும் என்று விரும்புகின்றனர். அவரும் அதைப் புரிந்து கொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும், பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது. இந்த மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவது தான் தார்மீகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் சரியானது.

தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது. குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில், பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்று போராடி வருகிற சூழலில், அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *