
புதுக்கோட்டை அருகே அரசு பேருந்திலிருந்து பழங்குடியின மாணவிகள் தள்ளி விடப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், இன்று (செப்டம்பர் 2) புதுக்கோட்டையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த எண் 8 கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சற்று தூரம் சென்றவுடன், கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி அந்த 10 மாணவிகளையும் நடத்துநர் கீழே இறங்க சொன்னதாக கூறப்படுகிறது.
மாணவிகள் இறங்க மறுத்த நிலையில், பேருந்தின் கதவை நடத்துநர் திடீரென திறந்ததாகவும், இதில் மாணவிகள் கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. ஆனால், ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளிவிட்டதாகவும், இதையடுத்தே மற்ற மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்தாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், காயமடைந்த மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும், ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச் செயல்.
கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குவதோடு, உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.



