நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது: மு.க.ஸ்டாலின், பிரேமலதா கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜய்காந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக கார்த்திகா போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தலின் போது தொடரப்பட்ட வழக்கின் காரணமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை போலீஸார் இன்று (அக்.20) கைது செய்தனர். இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் கார்த்திகா திமுகழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில் அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் தவெக அரசு நடந்துகொள்கிறது.இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக.நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் தவெகவில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக, இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. உங்கள் பாசிசம், பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
இந்த சம்பம் தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை அதிகாலை 5.30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியில் இருந்தபோது, உடை மாற்றிக் கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக, ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் என்றுகூடப் பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

‘மாற்றம், மாற்றம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கார்த்திகாவை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *