
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதற்காக 2006-ம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது தவெக அரசு.ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
ஆனால், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றப்படவில்லை என்று துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ” நெடுஞ்சாலை ஓரமாக வைக்கப்பட்ட கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சாலை ஓரமாக வைக்கப்பட்டதால் வாகனங்களின் அதிர்வின் காரணமாக கல்வெட்டு சேதமான நிலையில் 10 நாட்களாக சீரமைப்பு பணி நடைபெறுகிறது. பராமரிப்பு பணி மேற்கொண்டு எழுத்துகளுக்கு பாதிப்பு இல்லாமல் கல்வெட்டு பொருத்தும் பணி நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளனர்…



