
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலனைப் பாதுகாக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு ஆங்கில நாளிதழுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அளித்து நேர்காணலில், இப்போதும் குதிரை பேரம் நடக்கிறது. நீங்களும்இ நானும் அதற்குச் சாட்சியாக இருக்கிறோம். இது நம் கண் முன்னே நடக்கிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. வட இந்திய மாநிலங்களிலிருந்த இந்தக் கலாச்சாரம் தமிழகத்திற்கு மெல்லப் பரவியுள்ளது. இது மாநிலத்திற்கு நல்லதல்ல, எனவே இது நிறுத்தப்பட வேண்டும்.
ஏனெனில் தங்கள் அரசியல் நலன்களைப் பாதுகாக்கவும், அதிகாரத்தில் நீடிக்கவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். மக்கள் ஒரு கட்சிக்கு நல்லெண்ணத்துடன் வாக்களிக்கிறார்கள். வாக்காளர்களின் விரல்களில் உள்ள மை அழியும் முன்பே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினால், அது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். இது ஜனநாயகத்திற்கு நெருக்கடி தரக் கூடிய, அரசியல் அறத்தை மீறுகிற செயலாகும். இதில் ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ எது சம்பந்தப்பட்டிருந்தாலும் குதிரை பேரத்தை இடதுசாரிகள் எதிர்க்கிறோம்.
மக்கள் தான் ஜனநாயகத்தின் இறுதி பாதுகாவலர்கள். அவர்களிடம் சாட்டை இருக்கிறது. இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை மக்கள் தண்டிப்பார்கள். அவர்கள் மக்களின் தீர்ப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது” என்று கூறினார்.



