
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் தமிழக அரசியல் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக இன்று (செப்டம்பர் 9) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரண்டு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (செப்டம்பர் 9) தொடங்கியுள்ளது
இந்த நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளராக வழக்குரைஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.



