அனல் பறக்கும் பழநி ரூ.100 கோடி நில விவகாரம்: தலைமறைவான 3 பேருக்கு வலை!

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோயில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோயில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில். கடந்த 6-ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலையை அடுத்த பாப்பாகுளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி அடுத்த டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீதும் தேவஸ்தானம் சார்பில் பழநி அடிவாரம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, கோயில் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அவருக்கு உதவிய மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடாக நடைபெற்ற பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வும் உத்தரவிட்டுள்ளது.

இதன்பேரில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸார் பழநி கோயில் நிலம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பழநி தேவஸ்தான அலுவலகம், பழநி பத்திரப் பதிவு அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நிலத்தை விற்பனை செய்த பழநி கோயில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலை வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மூன்று பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *