
தன்னை எல்லோருமே உற்றுநோக்கி கவனிக்கும் பொழுதிற்காக காத்திருப்பது மனிதர்களின் இயல்பு. அதற்காக எந்த எல்லைவரைக்கும் சென்று திரும்பிட மனித மனம் சம்மதிக்கிறது. கூட்டத்தில் தான் மட்டும் தனித்து தெரிவதற்காக பளீர் என சட்டை போடுபவர்களை எல்லோருமே பார்த்திருப்போம். தான் சமைத்துத் தரும் உணவிற்கு தனித்த ருசி இருப்பதாக வீட்டார் மட்டுமல்ல, விருந்தாளிகளும் சொல்கிறபோது அந்தப்பெண் அடையும் சந்தோசமும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத தனியின்பம்.
அன்றாடங்களில் மட்டுமல் கலைகளிலும் தனித்து வெளிப்படவே பலரும் நினைக்கிறார்கள். ஒரு சிற்பக்கலைஞன் தன் மரணத்திற்குப் பிறகும்கூட தன்னுடைய தனித்துவமான வேலைப்பாட்டின் அடையாளம் அந்தச் சிற்பத்தில் படிந்திருக்க வேண்டும் என்றே விரும்புவான். மற்றவர்களுக்கு சாமி சிலையாக காட்சியளிக்கும் அந்தக்கலை, அவனைப் பொறுத்தவரை தன் கலையின் தனித்த அடையாளம் அவ்வளவே. தனித்து தான் தெரிய வேண்டும் எனும் மனநிலை ஏன் மனிதர்களுக்குள் உருவாகுகிறது என்பது மிக தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய உளவியல் பகுதி. தன்னைப் புறக்காரணங்களுக்காக புறமொதுக்கியவர்கள் தன்னிடம் வந்து இறைஞ்சி நின்று உன்னால் மட்டும்தான் முடியும், மாட்டேன்னு மட்டும் சொல்லிறாதப்பா எனக் கெஞ்சி அழைக்கிறபோது மனம் அடையும் சந்தோசத்தை அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும். அப்படியான நுண் மனப்பதிவினை கதையாக கடத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. அந்த சவாலை துணிச்சலாக ஏற்று தன்னுடைய கதை ஒன்றின் வழியாகக் கடந்தவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. கரிசல் காட்டின் உழவு கட்டிகளில் படிந்திருக்கும் வெக்கையை சொல்லாக உருட்டி எடுத்து தன் கதைகளை எழுதியவர் எழுத்தாளர் மேலாண்மை.
இப்போதும்கூட எப்போதாவது பஸ் வந்து போகும் ஒதுங்கிக்கிடக்கும் ஊர் அது. அந்த ஊர் மனிதர்களின் நல்லது கெட்டதுகளையும், சுக துக்கங்களையும் கதைகளாக உருமாற்றி தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறியத் தந்தவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. பள்ளிப்படிப்பையே எட்டித்தொட்டு பாதியிலேயே வெளியேறியவர் அவர். மேலாண்மறை நாட்டின் புழுதிக்காற்றில் இருந்தே அவருடைய நாவல்களும், சிறுகதைகளும் உருவாகின. ஆயிரம் சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். வறுமை பிடிங்கித் திங்கும் வாழ்க்கைச் சுழலுக்குள் சிக்கியிருந்த போதும் இலக்கியத்தின் மீதான ஈடுபாடு அவருடைய இடதுசாரி இயக்கத் தொடர்புகளின் வழியாகவே உருவானது. கிடைத்த அரசியல் தொடர்பு அவருக்குள் புத்தக வாசிப்பின் ருசியை ஏற்றியது.
தேடித்தேடி படிக்கத் துவங்கிய அவருக்குள் தான் வாசித்த கதைகள் எதிலும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கை ஏன் இல்லை எனும் கேள்வி அவரைத் துரத்திக் கொண்டிருந்தது. செம்மலர் இலக்கிய இதழில் அவருடைய கதை வெளியான போது மேலாண்மறை நாடு எனும் நம்மூர் கதையாக வந்திருக்கு பாத்தீரா என ஊரெங்கும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அதன்பிறகு எளிய விவசாயிகளின் கசப்பான பொழுதுகளையும், அவர்களின் கொண்டாட்ட மனநிலைகளையும் சிறுகதைகளாக்கினார். அவருக்கு அவருடைய மின்சாரப்பூ எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு இந்திய அரசின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. சிபிகள்,மானுடப்பிரவாகம் போன்ற தேர்ந்த கதைகளை எழுதிய மேலாண்மை பொன்னுச்சாமியின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று உயிரை விட.. அவருடைய ஆகச்சிறந்த கதை மட்டுமல்ல. தமிழ் இலக்கிய வெளிக்கு முற்போக்கு இலக்கிய முகாமின் அருங்கொடை உயிரை விட எனும் சிறுகதை.

உயிரை விட கதையும் மேலாண்மை பொன்னுச்சாமியின் எல்லாக் கதைகளையும் போலவே மேலாண்மறை நாடு எனும் கரிசல் காட்டில்தான் நடக்கிறது. பூச்சன் என்றைக்கும் இல்லாத அளவிற்கு அன்று உற்சாகத்தோடு விடியலை எதிர்பார்த்து கொட்டக் கொட்ட முழித்திருந்தான். ஏன் இப்படி பூச்சன் நிலை கொள்ளாமல் திரிகிறார் என்பது மாரியம்மாளுக்கும் தெரியும். நாளைக்கு ஊருக்குள்ள யாராவது கூரை மேயக் கூப்புட்டிருப்பாக, அதான் மனுஷன் துள்ளிக்கிட்டு கிடக்கு என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள். ஆனாலும் மாரியம்மாளுக்கு பூச்சனை நினைத்து அச்சம். சிகெரெட்ட ஊதி ஊதி சீக்க கொண்டு வந்து சேர்த்த உடம்பு பற்றிய கவலையும் அச்சமும் அவளைத் துரத்திக் கொண்டேயிருக்கும். ஆனாலும் பூச்சன் கடவுளே வந்து சொன்னாலும் கேட்கும் குணம் கொண்டவரில்லை.
பூச்சனைப் பொறுத்தவரை சோலையப்ப நாடார் நாளைக்கு கூரை மேயக் கூப்பிட்டிருக்காரு, கோழி கூப்பிட கிளம்பனும். உச்சி வெயில் தலைக்கு மேல வாறதுக்குள்ள வேலைய முடிக்கனும். கதையின் மைய முடிச்சினை வீட்டின் மேற்கூரையிலும் பூச்சன், மாரியம்மாள், சோலையப்ப நாடார்,கோபால்சாமி நாயக்கர் எனும் நான்கு கதாபாத்திரங்களுக்குள் கட்டி வைத்திருக்கிறார் எழுத்தாளர். இதுதொண்ணூறுகளின் கதை. திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் பெயர்களுக்குள் பதுங்கியிருக்கும் சாதியை அழித்துக் கலைக்க முயற்சி எடுத்தது. பெயருக்குள் சாதியா இருக்கிறது எனும் கேள்வி தமிழ்ச்சமூகம் குறித்த புரிதலற்ற கேள்வி. பெயர்களைக் குறிப்பிடும் போதே சாதிப்பின்னொட்டைக் குறிப்பிடாமல் விட்ட மறுநொடியில் புரிதலுக்கு உள்ளாகிவிடும். பூச்சன் ஒடுக்கப்பட்ட சமூகத்து மனிதன்தான் என்பது. விடிந்தும் விடியாத பொழுதில் மாரியம்மாள் கரைத்துத் தந்த கம்மங்கஞ்சியின் புளிப்புச் சுவை நாசியில் புரைப்பேற்றிட குடித்து மகிழ்ந்த பூச்சன், அழுக்குச் சட்டைப்பைக்குள் கிடந்த சிகரெட்டை எடுத்து வான்நோக்கி புகை விடுகிறான். அது ஒரு தனித்த சுகம். அடுத்த நொடியில் மாரியம்மாள் பதறுகிறாள். “அய்யா சாமி உன்னைய வச்சுத்தான் குடும்பமே பிழைக்குது, இப்பிடி உடம்ப கெடுக்குதியே, சுவர் இருந்தாத்தான சித்திரம் வரைய முடியும். கூரை மேல நிக்கயில பார்த்து இருய்யா,மசக்கம்,கிறக்கம் வாற மாதிரி இருந்தா சட்டுன்னு கீழ இறங்கிருன்னு”,பள்ளிக்குகூடத்திற்கு பிள்ளைய அனுப்புறாப்ல பூச்சனை கூரை மேய அனுப்பிவச்சா மாரியம்மாள் .ஏற்கெனவே ஒருநாளு தரையில நடக்கும் போதே தள்ளாடி விழுந்த மனுஷன்,இப்பிடி சொல்லச் சொல்லக் கேட்காம கூரைமேய வரிஞ்சுகட்டிப் போறத பார்த்து அவளுக்கு ஒரே மனப்பதட்டம்..

கூரை மேயிற இடத்திற்கு பூச்சன்தான் ராஜா. என்ன முதலாளி எல்லாம் ரெடியா இருக்கா. கொச்சைக்கயிறு,ஆக்கை, கிடுகு, சோளத்தட்டையெல்லாம் ரெடி பன்னியாச்சா. வேலைக்கு நடுவில எதுவும் இல்லன்னா அப்புறம் குறைபாடாகிப் போகும்,அதான் கேட்கேன் எனும் பூச்சனின் சின்ன மிரட்டலுக்கு கட்டுப்பட்டவர் போல சோலையப்ப நாடார் எல்லாவற்றையும் பூச்சனிடம் எடுத்துக் காட்டுகிறார். பூச்சன் சாமியைக் கும்பிட்டு ஏணி மேல் காலை வைத்து மேலே ஏறிவிட்டார். இனி வேலைப்பாடுதான்.” முதலாளி ஆக்கை கட்டை மேல தூக்கிப் போடுறது,கிடுகுகளைத் தூக்கித்தருறதுக்குஆள் வேனும்ல” என்கிற பூச்சனிடம். “ஏனப்பா அது ஒரு வேளை அதுக்கு இன்னொரு ஆளா,நான் எடுத்துத் தாரனப்பா “. சரி முதலாளி என்றவாறு இயற்கை உருவாக்கி வைத்திருக்கும் கொடும் வெயிலை கூரைகளைக் கொண்டு நிழலாக்கத் துவங்கினான் பூச்சன்.
பிறகென்ன மேலிருந்து பூச்சன் கட்டளைகளைப் பிறப்பிப்பதும் சோலையப்ப நாடார் அவன் குரலுக்குக் கட்டுப்படு ஏன்ட வேலை எடுத்த வேலை செய்யிற எடுபிடியாக மாறிப்போனார். அய்யா, அந்த ஆக்கை முடியத் தூக்கி மேல எறியும்,சோளத்தட்டைய மெதுவா தூக்கித்தாரும் என பூச்சனின் அதிகாரம் தூள் பறந்தது அங்கே. “எப்பயாச்சும் கரெக்டா என் கையில வந்து சேருதமாரி ஆக்ககக்கட்ட தூக்கிப் போடுதீரா. தள்ளித்தான் விழுது,எட்டி,எட்டி பிடிக்க வேண்டியிருக்கு. “இல்லப்பா,காத்து பர்ரு பர்ருன்னு அடிக்குள்ள, நுனிப்பகுதியை வாளித்தண்ணிக்குள்ள முக்கி நல்லா தூக்கி எறியும். ,அப்ப எப்பிடி கைக்குத் தப்பிப் போகுதுன்னு பாக்கேன்” எனும் குரலுக்கு கட்டுப்படு சோலையப்ப நாடார் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். பூச்சனின் மனத்திரையில் நகரும் காட்சி கதையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதி குறித்தும்,அதைத் தகர்த்து முறித்திட ஒடுக்கப்பட்ட சமூகத்து மனிதர்களின் வேட்கை குறித்ததான மனநிலையும் புரிதலுக்கு உள்ளாகிறது.
பூச்சன் உச்சினியில் இருந்து கீழே பூச்சியைப் போல பறந்து திரிந்து தன் சொல்லுக்கு கட்டுப்படு நடக்கும் சோலையப்ப நாடாரை கூர்ந்து கவனிக்கிறான். வேர்த்து விறுவிறுக்க,மேல் எல்லாம் கருத்துப்போய் அங்குமிங்கும் அலைகிற இவர்தான் பூச்சனை சுடுசொல் கொண்டு ஏசியவர். பஞ்சாயத்து கட்டி வைத்திருக்கும் நிழற்குடை பெஞ்சில் அன்றைக்குபூச்சன் உட்கார்ந்திருந்தான். அங்கு தற்செயலாக வந்த சோலையப்ப நாடார் அவனை எரித்து விடுவது போல பார்க்கிறார். பூச்சனும் எதுக்கு இந்த மனுஷன் நம்மள குறுகுறுன்னு பார்க்கிறார்னு யோசிக்கிறான். அந்த நேரம் அந்தப் பக்கமா வந்த நாயக்கரு, “ஈசான மூலை கருத்துக்கிடக்கு, குளிர்ந்த காத்தும் அடிக்கிது, ,இன்னைக்கு ஒரு பாட்டம் நல்ல மழை பெய்யும் போலயே சோலையப்பா” என்றார்.” மயிர்ல மழை பெய்யும், மட்டு மரியாதை இல்லாம சின்னச் சாதி பயக பூரா ரெட்டணக்கால் போட்டு நமக்கு எதுத்தாப்புல உட்கார்ந்தா மழை எப்பிடி பெய்யும். மழை இனி நம்ம ஊருக்கு வந்தாப்புலதான்ன்னு” பூச்சனை ஒரு முறை முறைச்சுட்டு போனாரு சோலையப்பன். பூச்சன் உட்கிப்போனான். காற்றில், நிலத்தில், நீரில் படிந்திருக்கும் சாதி நம்மை விடாமல் துரத்துகிறது. தன்னை பொதுவெளியில் துச்சமாக பேசிய அதே சோலையப்ப நாடாரை மேல இருந்து பார்த்தான் பூச்சன். ஒரு புழு நெளியிறாப்பில தெரிஞ்சது அவனுக்கு. பூச்சனுக்கும் ஏன் நம்ம மனசு கூரை மேயிற வேலைக்கு கெக்கலிகட்டி அலையுது என்பது புரிதலுக்கு உள்ளாகியது. அடுத்த நொடியில் “யோ, எங்க பிராக்கு பார்த்துக்கிட்டு இருக்கீரு கிடுக தூக்கிக்கொடும்னு பிறப்பித்த உத்தரவிற்குள் பொதிந்திருந்த குரல் பூச்சனின் குரல் மட்டுமல்ல, நூற்றாண்டு காலமாக அலைக்கழிக்கும் சாதித் துவேஷத்தை கலைத்துத் துரத்திட முழங்கிடும் எதிர்க்குரல். கதையை இந்தப் புள்ளியிலேயே முடித்திருக்கலாம். ஆனாலும் எழுத்தாளர் பூச்சன் தடுமாறிக் கீழே விழுவதாக காட்சிப்படுத்துகிறார்.

உயிர்போகத் துடிக்கும் மனித வாதையின் போலான நொடிகளில் மனிதர்களுக்குள் பதுங்கியிருக்கும் சாதிய வன்மம் காணாமல் போகிறது என கவனப்படுத்த வேண்டும் அவருக்கு. கீழே விழுந்த பூச்சனைச் சுற்றி ஊரே கூடி கை வைத்தியம் செய்து ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இந்தப் புள்ளியில் கதை எழுத்தாளனின் கைநழுவிச் செல்லும் தனித்த அற்புதம் நிகழ்கிறது. டாக்டர் சொல்கிறார். “எம்மா இனி இவரை தரையிலேயே வேலை செய்யச் சொல்லுங்க. கூரை மேய கட்டாயம் போகவிட்டுறாதீங்க”.அங்கிருந்து விழுந்தா எதுவும் நடக்கலாம் என்கிறார். பூச்சனுக்கு கெதக்கென ஆகிறது. டாக்டரின் குரல் வழியாக தெறித்த சொற்கள் பூச்சனின் மன அறையை எட்டவேயில்லை. வீட்டில் படுத்துக்கிடந்த நாள் ஒன்றில் கோபால்சாமி நாயக்கர் பூச்சனைத் தேடி வருகிறார். “பூச்சா நாளைக்கு மேக்கூரைய பண்டுவம் பார்க்க வேண்டியிருக்கு, உனக்கு தோது இருந்தா சொல்லப்பா”.
அடுத்த நொடியில் பூச்சனுக்குள் விடுதலையின் சிறகுகள் முளைக்கிது. வாரிச்சுருட்டி எழுந்தான். “எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சு வையுங்க,நான் கட்டாயம் வந்துருதேன்” வீட்டிற்குள் இருந்து வேகாரியா வெளிய வந்த மாரியம்மா,” அய்யா,அவர வேறு எந்த வேலைக்காச்சும் கூட்டிட்டுப் போங்க. அவர நம்பித்தான் பிள்ளைகுட்டிகளும் நானும் இருக்கோம். நொடிக்கு நொடி உசுர கையில பிடிச்சுக்கிட்டு பார்க்கிற பொழப்பு என்னத்துக்கு அவருக்கு, வேண்டாம்யா விட்டுறுங்க என்று கெஞ்ச ஆரம்பித்ததும், சரித்தா என கிளம்பினார் கோபால்சாமி. மாரியம்மாள் வீட்டிற்குள் ஒதுங்கிய நொடியில் பாய்ந்து வெளியேறி தெருவைக் கடந்து கொண்டிருந்த கோபால்சாமியை உரத்து குரல் எழுப்பி கூப்பிட்டான்.” அய்யா,நாளைக்கு கூரை மேய்ச்சலுக்கு பூச்சன் வருவான், ஆக வேண்டிய வேலையப் பாருங்க..’’” இல்லப்பா உன் உசுருக்கு ஆபத்துன்னு மாரி சொல்லுதாளே.”அவ கிடக்கா,போற உசிரு கூரையிலதான் போகுதாக்கும், ஏன் தரையில போகாதா. பூச்சன் நாளைக்கு வாறது உறுதி”. என்று திரும்பினான்..
ஒடுக்கப்பட்ட சமூகத்து மனிதர்கள் தங்களின் மீது எழுதப்பட்டிருக்கும் சாதித்துவேஷத்தை கலைத்து எழுதிடும் சந்தர்ப்பத்தை எதற்காக கைவிட வேண்டும் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். . உயிரைவிட மானம்தான் பெரியது எனும் தமிழ் சொல்வழக்கை கதையாக உருமாற்றியிருக்கிறார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி.
–ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



