
முதல் பார்வையில் எதிர்ப்படும் மனிதர்களை மதிப்பிடுவதற்கான மனம்சார் கருவிகள் பரந்த இந்த உலகினில் இருக்கிறதா என்ன?. எதிர்ப்படும் மனிதனோ அல்லது மனுஷியோ அவர்களுடைய புறவெளித் தோற்றத்தால் மட்டுமே அளக்கப்படுகிறார்கள். தோலின் நிறம் இந்த மதிப்பிடலில் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருப்பதைக் குறித்து விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளாக மனிதர்கள் பிறக்கும் நொடியிலேயே புறத்தோற்றத்தை வைத்தே மதிப்பிடும் மனநிலைக்குப் பலரும் வந்து விடுகிறார்கள். “பிள்ளை நல்லா, கலரா செக்கச் செவேர்னு இருக்கு,படிச்சு முடிச்சு கலக்டரா வரும்பா” . “என்ன பையன் கரு கருன்னு இருக்கான், காதப் பார்த்தாலே கலர் தெரியுதிலே, சரி விடுங்க நமக்கு கிடைச்சது இவ்வளவுதான்”.
இந்த இருவேறு முரண்பட்ட மன நிலைகள் மட்டுமே பெரும்பாலும் மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கான அல்லது வகைப்படுத்துவதற்கான சமூகத்தின் மனக்குணமாக இருக்கிறது. மனிதர்களின் குணத்தை மதிப்பிட சட்டென வெளித்தெரியும் நிறங்களையோ அல்லது தோற்றத்தை மட்டுமோ அடிப்படையாகக் கொள்வது எவ்வளவு பெரிய வன்முறை என்பதற்கு காலத்தில் பல சாட்சிகள் இருக்கின்றன. ஆனாலும்கூட இந்த குறைப் புரிதலை மனிதச் சமூகம் இன்றுவரையிலும் விட்டுத் தொலைக்கவில்லை. கலரில் மட்டுமல்ல, சின்ன சின்ன அங்கஹீனத்துடான் குழந்தைகள் பிறந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மீது விழுந்த சாபம் என்று அவர்களையே நம்ப வைக்க பெரும் முயற்சி எடுக்கிறார்கள். அந்த துர் சாபத்தின் நிழல் நிஜம்தான் போலேயே என சம்பந்தப்பட்ட மனிதனையோ அல்லது மனுஷியையோ நம்ப வைத்திடவே இங்கு பலரும் முயற்சிக்கிறார்கள். இன்னும் மேலே ஒருபடி மேலே போய் கருணையற்று கடவுள் இருந்த நொடியில் பிறந்திட்ட பிறப்பிது என கதைவிட முயற்சிக்கிறார்கள்.

அங்கஹினர்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்களை கருணைக்கொலை செய்வது தவறில்லை என எழுதப்பட்ட இலக்கியங்கள் தமிழில் உண்டு. வெகுசில இலக்கியக்காரர்கள் மட்டும் தங்களின் படைப்புகளின் வழியாக பாதிக்கப்படவர் உளவியலை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். தான் மட்டும் அல்லாது மொத்த சமூகத்தையும் புரிந்து கொள்ளுங்கள் மக்களே என சொல்லும் கதைகளை படைத்தளிக்கிறார்கள். இதில் விதிவிலக்குகள் உண்டு என்றபோதும், தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள் பெரும்பாலோர் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே இந்த வாழ்க்கையைப் பார்க்கிறாரர்கள். இதில் முற்போக்கு எழுத்தாளர்கள்., பிற்போக்கு படைப்பாளிகள் எனும் பேதம் இல்லவே “இல்லை. தமிழ்ச்சிறுகதை என்றாலே அது மனிதாயம் பேசுவதுதான் என்பதை எப்போதும் தமிழ்ச்சிறுகதைகள் நிருபித்துக் கொண்டேயிருக்கின்றன. அப்படியான கதைகளிலிலேயே மிக மிக தனித்த கதை.” அனாமிகா என்றொரு பெரும் பூனை.” எனும் எழுத்தாளர் அனுராதா ஆனந்த்தின் சிறுகதை.

எழுத்தாளர் அனுராதா ஆனந்த் அடிப்படையில் கவிஞர். மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பிலும் தொடர்ந்து கவிதைகளிலேயே தன்னுடைய ஆழமான ஈடுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அதிலும் குறிப்பாக உலக இலக்கியப் பரப்பில் தொடர்ச்சியாக இருந்த, இருந்து வருகிற தனித்த கவிஞர்கள் பலரையும் தமிழுக்கு தன்னுடைய மொழி பெயர்ப்புகளின் வழியாக கொண்டு வந்தவர் எழுத்தாளர் அனுராதா. எண் 7 போல போல வளைபவர்கள் எனும் முதல் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பினில் உலகின் ஆகச் சிறந்த கவிஞர்களின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரையிலும் ஆறு கவிதைத் தொகுப்புகளையும்,ஒரு சிறுகதைத் தொகுப்பையும் மொழி பெயர்த்திருக்கிறார். நீண்டு தொடரும் அவருடைய இலக்கியச் செயல்பாட்டில் இப்போதுதான் கதைகளை தமிழில் எழுதியிருக்கிறார்.
அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு மயிற்பீலி. இந்த மயிற்பீலிகள் நிறைந்திருக்கும் வனத்திற்குள்தான் அனாமிகா என்ற பெரும் பூனை ஓடிக்கொண்டிருக்கிறது. ஏழு சிறியதும் பெரியதுமானான கதைகளில் சிறந்த கதைகளில் ஒன்று அனாமிகா. இது அனுராத ஆனந்த் தின் சிறந்த கதை மட்டுமல்ல. விரிந்து விஸ்தாரமாக வளர்ந்து உயர்ந்து நிற்கும் தமிழ்ச் சிறுகதையெனும் பெரும் விருட்சத்தின் மிக முக்கியமான பெரும் கிளையுமாகும். மனிதர்கள் தனக்குள் ஒடுங்கிக் கிடக்கீறபோது இந்த உலகத்தை எப்படியெல்லாம் எதிர்கொள்வார்கள் எனும் உளவியல்சார் பக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு திறந்து காட்டிய பெரும் கதை அனாமிகா என்ற பெரும் பூனை. இந்தக் கதையின் மைய அச்சாகச் சுழலும் உடல் அரசியலின் தனிக்குரலை கதைச் சொல்லாக்கி கையளித்திருக்கிறார் எழுத்தாளர்.
“குளிக்கும் போது அங்குலம் அங்குலமாகத் தன் உடலை ஆராய்ந்து பார்ப்பது அனாமிகாவின் வழக்கம்” . இந்த முதல் வரியிலேயே கதை தன்னை சட்டென திறந்து கொள்கிறது. முதல் வரியிலேயே கதை முற்றிலுமாக வாசகனுக்கு வசமாவது எப்போதாவது மட்டுமே நடக்கும். அடுத்த அடுத்த வரிகளில் அனாமிகா என்னதான் செய்து கொண்டிருக்கிறாள் என்பதையும் துளி துளியாகக் கடத்துகிறார் எழுத்தாளர். குளியலறையில் அவள் இந்த வீட்டிற்கு வந்தபோது இருந்தது ஒற்றைக் கண்ணாடி. அதனை பார்ப்பதற்கு விரும்பாமலே குளியலறைக்கு வந்து போனவள்தான் அனாமிகா. இப்போது அந்த ஒற்றைக்கண்ணாடி அங்கு இல்லை. அந்த குளியலறையின் சுவர்களே கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டிருகின்றன.

நாற்பது வயதைத் தொட்டிருப்பவள் அனாமிகா. அவளுடைய உருவத்தை கேலியும் கிண்டலுமாக வதைக்கும் இந்தச் சமூகத்தையும் அதன் புறவெளிகளையும் எதிர் கொள்வதோடு, அந்த புறவெளிகளால் தனக்கு நேர்ந்த அவமானங்களைத் துடைத்தளிப்பதற்கான தந்திரமாகவே அனாமிகா இந்தக் கண்ணாடிக் குளியலறையை அமைக்கிறாள். அங்கிருந்தபடியே தன்னைத்தான் பார்க்கிறாள். தன்னுடைய தோற்றத்தை மட்டுமே கண்ணுற்ற மற்றவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவோ எட்டவோ முடியாத அவளுடலின் அழகினை ரசிக்கிறாள். அவளுக்குத் தோன்றுகிறது “ எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் அந்தந்த உடல்களுக்கு மட்டுமேயான தனித்த அழகுகள் இருக்கவே செய்கிறது எனும் சிந்தனை அவளுக்குக் குளியலறைக் காட்சிகளின் போதான ஒருநாளில் ஏற்படுகிறது. அதன்பிறகு உலகமே சதைப்பிண்டமாகப் பார்த்த தன்னுடலை அவள் ரசிக்கிறாள். ஆராதிக்கத் தொடங்குகிறாள். இது உடலரசியலின் மிக முக்கியமான மனப் பகிர்வு. இளம் வயதில் இருந்தே குண்டச்சி, குண்டோதரி,குட்டியானை என்று தன்னுடைய பள்ளித் தோழர்களாலும், தோழிகளாலும் மட்டுமல்ல அவளுடைய ஆசிரியர்களாலும் கடும் வெறுப்புடன் அழைக்கப்பட்டவள் அவள்.
மனித மனம் தன்னைச் சூழும் வெறுப்பின் அலையிலிருந்து தனித்து வெளியேறும் மனநிலையைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அனாமிகா தன்னுடலை வெறுப்பவர்களின் சுடுசொற்களில் இருந்து வெளியேறிட ஒரு வழியை இளமையிலேயே கண்டுபிடிக்கிறாள். தினமும் தன்னுடலையும் தன்னையும் வெறுத்தொதுக்கிய சொற்களையும் அந்த துர்சம்பவங்களையும் மனதிற்குள் நிரல் படுத்துகிறாள். பின் அதனை விரிவாக ஒரு டைரியில் எழுதுகிறாள். அந்த டைரி எழுத்துக்களை புனிதச் சடங்கினைப் போல விடாமல் இன்றுவரையிலும் செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நீள நோட்டில் நட்ட நடுவாக கோடு கிழித்து வலது பக்கத்தில் ஒவ்வொரு நாளும் தன்னுடைய உடலைப் பார்த்து தானே அசூசைப்பட்ட சம்பவத்தை வரிசையாக எழுதுவாள். இடது பக்கத்தில் மற்றவர்கள் எப்படி எப்படி தன்னை வெறும் சதைப் பிண்டமாகப் பார்த்து உருவக் கேலியால் வதைக்கிறார்கள் என்பதை எழுதுகிறாள். சமயத்தில் வலது பக்கத்தைவிட இடது பக்கத்தில் எழுதிக் குவித்த வரிகளின் அளவு கூடிப் போவதை அனாமிகாவால் தவிர்க்க முடியவில்லை.

“ அவளது உருவமற்றுப் பெருத்திருக்கும் முகத்தைப் பார்க்கும் பார்வைகள்.ஒரு காட்சிப் பொருளைப் போல உடலின் ஒவ்வொரு பாகத்தையும் சலிப்புடன் பார்க்கும் பார்வைகள், அவளிடம் மட்டுமே கேட்கப்படுகிற கேலியும் வம்பும் தொக்கி நிற்கும் கேள்விகள். எந்த உரையாடலும் கடைசியில் அவளுடைய உடலின் பொருந்தாத் தன்மை குறித்த அருவருப்பான சொற்களால் இடது பக்க காகிதமும் எழுதிட இடமின்றிப் போகும்படியான நாளாகவே அனாமிகாவின் ஒவ்வொரு நாளும் அமைந்து விடுகிறது. தன்னைச் சுற்றி மலைபோல் படர்ந்து விரிந்து கிடக்கும் வயிற்றினை வெட்டித் தூர எறிந்து விடலாமா என்றும் அவளுக்குத் தோன்றி இருக்கிறது. எதையும் சட்டெனத் துணிந்து செய்துவிட முடியாதபடி தடுக்கும் அவளுடைய சோம்பேறித் தன்மையில்தான் அனாமிகாவின் உடல் தொக்கி நிற்கிறது அதனால்தான் அவள் தற்கொலை செய்து கொள்ளாமல் உயிர்பிழைத்து நிற்கிறாள் என்பதை அனுராதா ஆனந்த் கண்டறிந்து வாசகனுக்குச் சொல்கிறார். புறவெளியின் உதாசீனங்களால் துக்கப்பட்டு தற்கொலை மனநிலைவரை போய்த் திரும்பிய இவளை கண்ணாடிக் குளியலறைக்குள் தன்னுடலை ரசித்துக்கிடக்கும் புள்ளிவரை உந்தித்தள்ளியது எது என்பதே இந்தக் கதை அடைந்திருக்கும் புனைவின் உச்சம்.
மனித மனங்களை சொஸ்தப்படுத்தும் அருமருந்துகள் புனைவுகள் . நிரம்பி வழியும் இடது பக்கத்து டைரிகளின் சொற்களால் காயமுற்ற அனாமிகா , ஒரு நாளின் குளியல் பொழுதில் தன்னுடலின்மீது அவள் தற்செயலாகக் கண்ட சிறுபுள்ளிதான் அவளை வேறு .ஒருவளாக மாற்றுகிறது.” இடது பக்கம் கீழ்க் கழுத்தில் ஒரு புள்ளி பழுப்பு நிறத்தில் மரு போன்று முதலில் தோன்றியது. முதன் முதலில் அந்தப் புள்ளியைப் பார்த்ததும் ஏதோ ஒரு மகிழ்ச்சி அவளுடைய உடலெங்கும் பரவியது. அவளுடைய உடலில் அழகின் வசீகரம் அங்குலம் அங்குலமாக மிளிர்வதைப் பார்க்கவே அனாமிகா கண்ணாடி குளியலறையை அமைத்திருக்கிறாள். நாளடைவில் தன்னுடலில் விதவிதமாக பல நிறப்புள்ளிகள் தோன்றிக் கொண்டேயிருப்பதைப் பார்த்து ரசித்துக் கிடந்தாள். கதையை வாசிக்கும்போது மனிதர்கள் தன்னை வதைக்கும் எதிலிருந்தும் வெளியேறுவதற்கான சிறு புள்ளியாவது தென்படாதா என்றே ஏங்குகிறார்கள் என்பது புலனாகிறது.
அனாமிகா தனித்தவள். அவள் தனக்குள் நினைத்துக்கொள்கிறாள். இந்தப் பிரபஞ்சம் தனக்கு இழைத்துவந்த சகல தீமைகளையும் இல்லாமல் செய்வதற்கான மார்க்கத்தையும் அதுவே கண்டுபிடித்திருக்கிறது. அவையே தன்னுடலை நிறைக்கும் வர்ணப்புள்ளிகள் என்று நம்புகிறாள். அந்த மூவர்ணப்புள்ளிகள் அப்படியே புள்ளிகளாக அவளுடலில் நீடித்து நிலைத்திருக்கவில்லை. அது நீள் கோடாக உருமாறுகிறது. புள்ளிகள் கோடாக உருமாறும் வித்தையை அவள் தன்னுடலின் மீது ஆண் வரைந்திட்ட புதிர் கோலங்களே என்பதையும் வாழ்க்கை அவளுக்கு கற்றுத்தருகிறது.
தன்னுடைய ஆண் நண்பர் தன்னை வசீகரிக்க நீயாக வரைந்த டாட்டுக்கள்தானே இந்தப் புள்ளிகள் என்று சொல்வதோடு மட்டுமல்லாது அதனை அழித்தும் பார்க்கிறான். எப்போதும் ஆண் பெண்ணுக்குள் தனித்தன்மைகள் சுடர்விடுவதை விரும்புவதேயில்லை. இதனையும் வாழ்க்கைதான் அனாமிகாவிற்கு கற்றுத்தருகிறது.தனக்குள் சுருங்கிக் கிடப்பதாலும் பிறரின் வசைகளையும் கேலிகளையும் பொருட்படுத்துவதாலும் எதுவும் விளையப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் அது உன் உடல் அதை ஆராதி, கொண்டாடு. அது உனக்கு வேறு ஒரு உலகத்தைத் திறக்கும் என்பதை கவித்துவமான சொற்களால் கடத்திய கதை எழுத்தாளர் அனுராதா ஆனந்த்.. எழுதியிருக்கும் அனாமிகா என்ற பெரும் பூனை. தொன்னூறுகளில் நவீன பெண் கவிதைகளின் பாடுபொருளாக இருந்த உடல் அரசியல் புனைவிலக்கியங்களின் பக்கம் வெகு குறைவாக மட்டுமே இடம் பெற்றது. அந்தக் குறையை 2025-ல் சரி செய்திருக்கிறார் அனுராதா ஆனந்த்..
– ம.மணிமாறன் (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



