ஒரு கதை 22: போலிமைகள்

நாம் கண்கொண்டு பார்ப்பது மட்டும் உண்மையில்லை. உண்மையை உணர்ந்து அறிய வேண்டும். அப்போதுதான் அசலும் போலியும் அறிய முடியாத வகையில் உறைந்து கிடப்பதைப் பிரித்தறிய முடியும். போலிகளும் பொய்மைகளும் அரியரண ஏறி அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம். தத்துவ உள்கூடற்ற பிம்பங்கள் மையத்திற்கு வந்திருக்கும் நாளில் அசலான தலைமைத்துவம் விளிம்பிற்கும் வெளியே தள்ளப்பட்டிருப்பதை நித்தமும் கண்டும் காணாமல் போகிறோம். இந்த பொறுப்பற்ற தன்மைகளின் மீது கேள்விகளை எழுப்பவே தமிழ்ச்சிறுகதைகள் எப்போதும் விரும்புகின்றன. அசலைக் காட்டிலும் வசீகரக் கவர்ச்சியில் தங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன பிம்பப் போலிகள். அதிலும் தன்னுடைய வாழ்வினையே கோட்பாடுகளுக்குத் தத்துக் கொடுத்துவிட்டேன். வேறு என்ன செய்ய முடியும் என்னால்,என்று சொல்லித் திரிபவர்களால் நிறைந்திருக்கிறது இந்த உலகம். நான் பெரியாரின் அணுக்கத் தொண்டர் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர்களில் பலரும் வயது முதிர்ந்த போது கோயில், கோயிலாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஏன் எல்லோரும்தான் பார்த்திருக்கிறார்கள்.

ஆலைத் தொழிலாளியாக வாழ்வினைத் துவங்கி தொழிற்சங்கத்தில் தீவிரமாக இயங்கிய ஒருவர் காலமாற்றத்தில் சிறு முதலாளியானார். தொழிலாளியாக இருந்தபோது தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். இப்போது அவருடைய நிறுவனத்தில் பணி செய்யும் வேலையாட்களிடம் குறைந்தபட்சக் கனிவுடன்கூட நடப்பதில்லை . எங்கே பிசகியது அவர் கற்ற அரசியல் கல்வியும்,கோட்பாட்டுப் புரிதல்களும்? இந்த மனநிலை மாற்றத்தை காலநதிக்குள் நீந்திப் போய் முன்நோக்கி பார்க்கும் போது நமக்கு ஒரு விஷயம் புரிபடும். நிஜத்தில் இவர்கள் யாவரும் அசல் அல்ல, முழுப்போலிகள் என்பதற்கான சாட்சியங்கள் அந்த நாட்களில் அப்போதே தென்பட்டிருக்கும்.

உலகத்தீதிற்குத் தெரியாத வண்ணம் தங்களுக்குள் தாங்களே பதுங்கியிருந்தார்கள். நம்மில் பலரும் அவர்களுடைய போலி நடிப்பில் மயங்கிக் கிடந்திருப்போம். அப்படியான போலி மனிதர் ஒருவரின் கதையே ஒரு கதைத் தொடரில் இன்று. காந்தி என்பது இந்திய வரலாற்றில் ஒரு மனிதரைக் குறிக்கும் சொல் அல்ல. அது ஒரு தேர்ந்த அனுபவம். காந்தியைக் கடந்த காந்தியம் எனும் எழுத்தாளர் பிரேமின் புத்தகம் காந்தியத்தின் சமகாலத்தை கேள்விக்கு உட்படுத்திய புத்தகம். காந்தி பற்றிய கதைகள் தமிழில் ஐம்பதிற்கும் மேல் எழுதப்பட்டிரூருக்கிறது. விந்தனின் காந்தியம் பற்றிய கதை சுதந்திரத்திற்குப் பிறகான துவக்க நாட்களின் கதை. காந்தியப்போலி ஒருவரின் கதையை காந்தியவாதி எனத் தலைப்பிட்டே எழுத்தாளர் விந்தன் எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் விந்தன் புதுமைப்பித்தன் காலத்தைய எழுத்தாளர். ஒரு விதத்தில் விந்தனை நாம் முதல் முற்போக்கு சிறுகதை எழுத்தாளர் என்று வைத்துக்கொள்ளலாம். மிக மிக வெளிப்படையாக நான் கதைகளின் மூலமாக பிரச்சாரம் தான் செய்கிறேன் என்று அறிவித்தவர்.மெளனி, கு.ப.ரா, ல.சா.ரா போன்ற அவர் காலத்தின் எழுத்தாளர்கள் மனிதர்களின் மனங்களுக்குள் நிகழும் நுண்ணிய மாற்றங்களைக் கதைகளாக எழுதிக் கொண்டிருந்தபோது, புறவெளிகளின் துக்கத்தை கதைகளாக உருமாற்றி படைத்தளித்தவர் எழுத்தாளர் விந்தன். வாழ்க்கைப்பாடுகளே மனிதர்களை உருவாக்கும். இது ஒரு எளிய வாழ்க்கை தத்துவம். பள்ளிக்கூடக் கல்வியைக்கூட முறைப்படி கற்றுத் தேறாதவர் எழுத்தாளர் விந்தன்.

காய்ந்து கிடக்கும் வயிற்றைச் சாந்தப்படுத்த கிடைத்த எந்த சிறு வேலையையும் செய்து கொண்டிருந்தார் விந்தன். அவர் பார்த்த வேலை அனுபவங்கள் யாவற்றையும் கதைகளாகவும் எழுதியிருக்கிறார்.அப்படித்தான் ஒரு அச்சுக்கூடத்தில் அச்சுக்கோர்க்கும் வேலைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன் வழியே தொழில்நுட்பத்தை மட்டுமல்ல மொழியையும் இணைந்தே கற்றார். அதன்பிறகு அவர் எழுதிய சிறுகதைகள் கல்கி, கலைமகள்,விகடன் போன்ற வணிகப் பத்திரிக்கைகளிலும் இடம் பெற்றது.கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே எனும் முழக்கத்தை தன் கதைகளின் வழியாகக்கண்டடைந்தவர் எழுத்தாளர் விந்தன். அதீத கலைக் கோட்பாடுகளின் மீது எந்த விதமான மயக்கமும் கொண்டவரல்ல எழுத்தாளர் விந்தன். அவருடைய கதைகளின் முதல் சொல்லில் இருந்து முற்றுப்புள்ளி வரையிலும் தேர்ந்து திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கும். உதிரிப் பாட்டாளிகள், சில்லறைத் திருடர்கள், குடும்ப அமைப்பின் நச்சுப் புடுங்கலில் சிக்கித் தினறும் பெண்கள் என ஒடுக்கப்பட்டோரின் குரலை மட்டுமே தன்னுடைய கதைகளுக்கான கச்சாவாக எடுத்துக்கொண்டவர் எழுத்தாளர் விந்தன்.

விந்தன் எழுத்து மட்டுமே தன் வாழ்நாளுக்கான ஜீவிதம் என தன்னை வரித்துக்கொண்டவர். அதனால் தனக்கு நேர்ந்த துயரங்களையும்கூட அவர் கதை எழுதித்தான் கடந்திருக்கிறார். துக்கத்தின் பொழுதுகளைக்கூட கதையென வடிக்கும்போது நக்கலும், நையாண்டியுமான மொழியில் கதை எழுதுவதில் தேர்ந்த நிபுணர் எழுத்தாளர் விந்தன். அப்படியான அவருடைய கதைகளில் ஒன்றே காந்தியவாதி. மிகச்சிறிய கதையும்கூட. கதையின் மையம் காந்தியவாதியாக தன்னைத் தம்பட்டம் அடித்துப் பிரபலபடுத்திக் கொண்டிருந்த துளசிங்கராயர் எனும் பெரும்பணக்காரர் பற்றிய கதை. அவர் மட்டுமல்ல. அவருடைய அண்ணனும் தம்பியும்கூட பெரும் பணக்காரர்களே. சுதந்திரம் நெருங்கி வந்து கொண்டிருந்த நாளில் பெரும் பணக்காரர்களுக்கு காந்தியராக தன்னைக் காட்டிக் கொள்வது ஒரு பேஷனாக இருந்த நாள் அது. அண்ணன் தம்பிகள்மூவரும் காந்தியர்கள். மொத்த ஊரே இந்தக் காந்தியர்களின் நிலத்தில் வேலை செய்துதான் பிழைப்பை ஓட்ட வேண்டியிருந்தது.

அதிலும் துளசிங்கராயர் எப்படிப்பட்டவர் தெரியுமா? .கான் அப்துல்கபார்கான் எல்லைக்காந்தி என்றால் எங்கள் ஊர்க்காந்தி துளசிங்கராயர் மட்டும்தான் என ஊரையே நம்ப வைத்திருக்கிறார். வீட்டில் உயர்ந்து நிற்கும் மகாத்மாவின் புகைப்படத்திற்கு முன்பாக தொழுது வணங்கி நின்று வாழ்க நீ எம்மான்..இந்த வையத்து நாட்டில் எல்லாம் என உரத்த குரலில் பாடி அதனை ஊர் அறியச் செய்த பிறகுதான் அந்த நாளின் வேலைகளையே துவக்குவார். கதை ஒரு தீபாவளி நாளிற்காக ஊர் தயாராகும் நாளில் துவங்குகிறது. தன்னிடம் தீபாவளி கொண்டாட கடன் கேட்டு நிற்கும் வேலையாளிடம் “ஏம்பா கடன் வாங்கித்தான் தீபாவளியைக் கொண்டாடணுமா? எளிமை வேணுமப்பா எனச் சொல்லி காந்தியம் என நினைத்துக்கொண்டு அவர் அடிக்கும் லெக்சர்தான் மொத்தக்கதையே. மனிதனுக்கு சொல்லில் சத்தியம் வேண்டும். நடத்தையில் ஒழுக்கம் வேண்டும்.இதைத்தான் மகாத்மா காந்தி அன்றே சொன்னார். இன்று காந்தியரான நான் சொல்கிறேன் என்கிறார் துளசிங்கராயர். காந்தியின் வழியில் நடக்க விரும்புகிற மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன தெரியுமா?. அந்த ஊரில் இதற்கென இருக்கும் ஒரே அடையாளம் தான்தான் என ஊரை நம்ப வைத்திட அவர் போடும் வேஷம் என்ன தெரியுமா? வேறு என்ன, உடையலங்காரம்தான். அவருடைய உடை என்ன தெரியுமா?. மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு அவ்வளவுதான்.

கதையில் அவர் நேர்படும் போதெல்லாம் கையெடுத்துக் கும்புடுகிறவர்கள் பலரும் தங்களுக்கூள்ளேயே அவரைக் குறித்து நசுக்கிச் சிரித்துக் கொள்கிறார்கள். வெளிப்படையாக அவர்கள் பார்த்து வந்த அந்த சம்பவத்தைச் சொல்லவே முடியாது. அதற்காக எழுத்தாளாரால் கண்டும் காணாமல் இருக்க முடியுமா? அலர் ஊராருக்கு மட்டுமல்ல,நமக்கும் அந்த சம்பவ நாட்களின் காட்சிகளைக் கதைக்குள் கடத்துகிறார்.கதையை சட்டெனத் திருப்பி வேறு ஒன்றாக உருமாற்றுவதில் விந்தன் மன்னாதி மன்னர். அடுத்தடுத்த வரிகளில் நகரும் கதையின் சொற்களே இதற்கு சாட்சி. “ ஒரே ஒரு கெடில்லாக் காரைத் தவிர வேறு கார் எதாவது வைத்துக் கொண்டிருக்கிறேனா?. இல்லை. உள்ளூரிலும் ஊட்டியிலும் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தவிர வேறு பங்களாக்கள் உண்டா? ஊஹீம். காந்தியடிகளின் பிரம்மச்சரியத்தை நீரும்தான் படித்தீர். ஆனால் உம்மோட முதல் தாரம் இறந்ததும் நீர் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டீர்..நான் அப்படி செய்து கொண்டேனா? கிடையாது”

இப்படியே கதை முழுக்கத் தொடர்கிற சொற்கள் பகடியாக கதையை நகர்த்துகிறது. விந்தன் எப்போதுமே தன்னுடைய கதைகளை அநாயசமான பகடிச் சொற்களால் கடத்துவதில் வல்லவர். எந்த உம்மணாமூஞ்சி மனிதனும் சிரித்து உருளாமல் விந்தனின் கதைகளைப் படிக்க முடியாது. பகடியின் உச்சம் என்ன தெரியுமா? நிகழும் சிக்கலான சூழலின் மீது வைக்கப்படுகிற கூர்மையான விமர்சனமாக பகடியே மாறிவிடும். உரத்த குரலில் அல்லது அமைதியின் சூழலுக்குள் கதைகள் வந்து கொண்டிருந்த நாளில் காந்தியவாதிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருந்த பலரும் எப்படி போலியான மனிதர்களாக இருந்தார்கள் என்பதைக் கதையின் கடைசி வரிகள் காட்டுகின்றன. கதை சொல்லி நமக்குச் சொன்னதே கதையின் கடைசி வரிகள்.

“ நான் எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! உள்ளே ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்கள் ஊர் காந்தி எழுந்தருளியிருந்தார். மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள், அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய் வாய்மையையும், தூய்மையையும்,பண்பையும்,பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக்கொண்டிருந்தார்.!…

எதனையும் நேரடியாகச் சொல்ல முடியாத சூழல் உழைக்கு வர்க்க மனிதர்களுக்கு இருக்கும். அதனால் அதனைச் சொல்லாமல் இருக்கக்கூடாதல்லவா?.குரூரத்தையும் இடித்துக்கூறிட உழைக்கும் வர்க்கம் கைக்கொண்டகதை கூறல் முறையே அங்கதம் அல்லது பகடி. எழுத்தாளர் விந்தன் உழைக்கும் வர்க்க மனிதர்ளின் பாடுகளைக் கதையெனச் சொல்ல வந்தவர். அதனால்தான் விந்தனின் தனித்த கதைமொழி அங்கதம் நிறைந்து ததும்பும் பகடியாகவே வெளிப்படுகிறது. எழுத்தாளர் தோழர் விந்தனின் கதைகளில் தனித்த கதையே காந்தியவாதி.
ம.மணிமாறன் (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *