
பொருட்களின் மீதான மனிதர்களின் வேட்கை இயல்பானதில்லை. அது சூழலால்தான் உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்பட்டு அவரவர் இருப்பிடம் வந்து சேர்ந்த பொருட்கள் அதன் மதிப்பினை மெதுவாக இழப்பதும் இயல்பாக நடக்கவே செய்கிறது. வந்த பொழுதில் விட்டுப் பிரிந்திட மனமின்றி அந்தப் பொருட்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பது குழந்தைமையின் இயல்புகளில் ஒன்று. புதிதாக வாங்கிய செருப்பினைக்கூட நடுவீட்டில் வைத்துக் கொண்ட கதைகள் எல்லாம் இங்கு நிறைய உண்டு. வீடுகளுக்குள் தொன்னூறுகளில் வந்து சேர்ந்தது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி.
அது ஒன்றும் தானாக வந்து சேரவில்லை. பக்கத்து வீடு ,எதிர்த்த வீடுகளின் பார்வையில் படும்படி அதனைக் கொண்டுவந்து சேர்த்த பெருமைமிகு பொழுதுகள் எல்லோருக்குள்ளும் ரசமான கதைகளாக படிந்திருக்கிறது. யாருமற்ற பொழுதுகளில்கூட தனியாக வீடுகளுக்குள் பாடிக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருக்கின்றன,இருந்தன அவைகள் யாவும். இன்றைக்கு தன்னை இயக்குபவருக்காக காத்துக்கிடக்கின்றன வீடுகள் எங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள். .ஆடம்பரப் பொருளாக நம்மிடையே பழக்கப்படுத்தப்பட்ட பல பொருட்கள் இன்றைக்கு தவிர்க்க இயலா பொருட்களாக காலத்தால் உருமாற்றப்படுவதும் பிறகான நாட்களில் அவையாவும் கண்டு கொள்ளப்படாமல் விடப்படுவதும் ஒரு இயல்பான வாழ்விளையாட்டே.
வீடுகளை வடிவமைக்கும் போதே மத்தியதரவர்க்கம் நடுஹாலில் தொலைக்காட்சிப் பெட்டிக்கான இடத்தை அலங்காரத்தோடு தெரிவு செய்கிறது. ஒருவிதத்தில் மனிதர்களின் மேன்மையைச் சொல்லும் குறியீட்டு அடையாளமாகிப் போகின்றன அவையாவும். மெதுவாக அதன் இடத்தை இப்போது கைபேசிக்கருவிகள் பிடித்திருக்கின்றன. இரவுகளில் எல்லா விளக்குகளையும் அனைத்தறகுப் பிறகு அங்கங்கு ஒளிப்புள்ளிகளாக செல்லிடைப் பேசிகளின் பளீர் வெளிச்சம் கண்களைக்கூசச் செய்கிறது. உறக்கமற்ற பொழுதுகளை வீடுகளுக்குள் இயல்பாகக் கொண்டுவந்து சேர்த்த இந்த கையடக்கக்கருவி இப்போது உடலின் ஒரு பாகத்தைப் போலவே மனித குலத்தோடு ஒட்டிக்கிடக்கிறது.

நாளைக்கு இதன் இடத்தை வேறு ஒருபொருள் பிடித்துவிடும் கதையும் உலகினில் நடக்கவே போகிறது. அசேதனப் பொருட்கள் இருப்பிடம் வந்து சேர்ந்ததேகூட வரலாற்றின் ஒருபகுதிதான். ஒவ்வொரு பொருளின்மீதும் காலத்தின் ரேகைகள் படிந்து இருக்கின்றன. ஒருகாலத்தில் தன்னுடைய குலப் பெருமை பேசிடக்கிடைத்த வாய்ப்புகளை உருவாக்கித்தந்த பொருட்கள் தூசிபடிந்து மூலைகளில் அசைவற்றுக் கிடப்பதும் நடக்கவே செய்கிறது. காலத்தை எழுதும் கலையே இலக்கியமும் எழுத்தும். இருளடைந்து கிடந்த கிராமத்து ராத்திரிகளை சுடர் ஏற்றிய மின்சாரத்தின் கதையை கரண்ட் என கதையாக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணின் தனித்த கதை நாற்காலி. கரிசல் காட்டுக் கிராமங்களின் வீடுகளுக்குள் விதவிதமாக பொருட்கள் வந்த கதையும், பின்னாளில் அவை பயணற்றதாய் மூலையில் பதுங்கிப்போனதையும் விதவிதமாக தன் கதைகளில் எழுதியவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அப்படி அவர் எழுதிய மிக முக்கியமான கதை நாற்காலி.
எழுத்தாளர் கி.ரா கரிசல் இலக்கியம் எனும் தனித்த இலக்கிய வகைமையை உருவாக்கியவர். அரசு எந்திரம் உருவாக்கி நிலைப்படித்திருக்கும் பூகோள எல்லைகளை கதைகளாலும் கலைகளாலும் கலைத்து வரைந்தவர் எழுத்தாளர் கி.ரா. கரிசல் இலக்கியம் என அவர் உருவாக்கிய புதிய கதை முறைமை சற்றே பெரியதாக வளரவும் செய்தது. புலம் பெயர்ந்து கரிசல் காடடைந்த உழவுக்குடிகள் தன்னுடைய அசுர உழைப்பால் மேடுறுத்திய நிலத்தின் கதைகளை கி.ராவைத் தொடர்ந்து பலரும் எழுதினார்கள். அது வட்டாரஇலக்கியம் என ஆய்வாளர்களால் வகைப்படுத்தப்பட்டது.
அடிப்படையில் எழுத்தாளர் கி.ராஜநாரயணன் ஒரு கதை சொல்லி. வாய்மொழி வழக்காறுகள், மனிதர்கள் உருவாக்கிய கிராமப்புற தெய்வங்களின் கதைகள், கிராமப்புற சொல் வழக்குகள்,விடுகதைகள்,சொலவடைகள் என கி.ராவின் பெரும் இலக்கியப் பங்களிப்புகள் வரலாற்று ஆவணங்களுக்குச் சமமாக இன்றைக்குப் பார்க்கப்படுகிறது. தென்பகுதிக்கு தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கூட்டம் இடம்பெயர்ந்து வந்ததையும், தன்னுடைய உழைப்பினால் அவர்கள் நிலத்தைப் பன்படுத்தி வளர்த்த கதைகளையும் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் எனும் இரண்டு பெரும் நாவல்களாக உருவாக்கினார் எழுத்தாளர் கி.ரா. இந்தப் புள்ளியில்தான் இலக்கியங்களை வரலாற்று ஆவணங்களுக்குச் சமமாக வைத்துப் பார்க்கும் வழக்கம் தமிழ் மொழியில் ஏற்படத்துவங்கியது. அவருடைய சிறுகதைகளின் உள்ளடக்கமும் கரிசல் வாழ்வின் ஏற்ற இறக்கங்களும்,சோலி பாடுகளும்தான். அவருடைய சிறுகதைகளில் மிக மிக தனித்தது நாற்காலி.

நாற்காலி கதை கரிசல் கிராமத்தின் வீட்டுக் குழந்தைகளின் பார்வையில் சொல்லப்படுகிறது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் வெறும் தரையில் உட்கார வைக்க முடியாதல்லவா? கோரம்பாய்களை விரித்து வைத்து உட்காரச் சொல்ல அந்த வீட்டிற்கு வந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் ஒரு சப்ஜட்ஜ். முக்காலி ஒன்றை எடுத்துப் போடுகிறார்கள் அந்தவீட்டுக் குழந்தைகள். முக்காலிகளில் தடுமாறாமல் உட்காருவதே பெரும் கலை. சப்ஜட்ஜ் என்றால் சட்டம் படித்து அறிந்தவர்கள் அல்ல. வெள்ளைக்காரர்கள் காலத்தில் மக்களுக்கிடையே ஏற்படும் வம்பு வழக்குகளைப் பைசல் பண்ணிட செய்யப்பட்ட ஒரு சிறு ஏற்பாடு. ஒருவிதத்தில் இந்த சப் ஜட்ஜ் அந்த வீட்டுக்காரர்களுக்கு உறவினரும்தான்.
குழந்தைகள் நினைத்ததைப் போலவே விருந்தினர் தடுமாறித் தத்தளித்து கையூன்றி தப்பித்துவிட்டார். குழந்தைகள் அந்தக்காட்சியை மனதிற்குள் நினைத்து நினைத்து வெகுகாலம் சிரித்துக் கிடந்தார்கள். “எப்பா எதுக்கு இந்த முக்காலி பேசாம நான் இந்த தூண் சுவரோரமா சாஞ்சு உட்கார்ந்திருதேன்” என்று முக்காலியைத் தள்ளி வைத்து விட்டார். யார் யாரோ உட்கார்ந்த இந்த சிற்றாசனம் இனி பயனற்றதாகப் போகிறது. அவர் ஏதேதோ பேசிவிட்டு கிளம்பிவிட்டார். குழந்தைகள் மனதில் மட்டுமல்ல, அந்த வீட்டுப் பெரியவர்கள் மனதிலும் முக்காலியின் இடம் காலாவதியாகி விடுகிறது. வீட்டிற்கு நாற்காலி வாங்குவது என்று அந்த வீட்டில் முடிவெடுக்கிறார்கள். அவ்வப்போது அருகாமைச் சிற்றூருக்கு போய்வந்த நாட்களில் நாற்காலியை பார்த்திருக்கிறார்கள்.
அந்த சொகுசாசனம் நம் வீட்டிற்கும் வந்து சேரவேண்டும் என்பது குழந்தைகளின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. முக்காலி தவறியதால் நாற்காலி வரப்போகிறது என குழந்தைகள் நம்பத்துவங்கினர். இந்த முடிவினை எட்டித் தொடுவதற்கு குழந்தைகளின் தாய்மாமாவும் உதவுகிறார். ஒன்றல்ல, இரண்டு நாற்காலிகள் செய்வது என்று முடிவாகிறது. ஒன்று அவர்களுக்கு மற்றொன்று மாமாவுக்கு. அந்த கிராமத்திற்கு முதன் முதலாக நாற்காலி வரப்போகிறது. கதையின் போக்கில் மனிதர்களின் உரையாடல்களின் வழியே காலத்தைப் பதிவு செய்வதில் எழுத்தாளர் கி.ரா. மகா சமர்த்தர். அந்த நாற்காலியை எந்த மரத்தில் செய்வது எனும் உரையாடல் நடக்கிறது. தேக்கு மரத்தில் செய்தால்தான் நீண்ட நாள் உழைக்கும் என ஒரு கட்சியும், இல்லையில்லை வேம்பில் செய்வோம் என மற்றொரு கட்சியும் பிரிகிறது.
அப்புறம் நகரத்தில் இருந்து தச்சரை அழைக்க வேண்டும், அவர் செய்த நாற்காலியில்தான் கவர்னரே அமர்ந்திருக்கிறார் எனும் தகவலைக் கதைக்குள் கடத்துகிறார் கி.ரா. கவர்னர் எனும் ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து சேர்க்க. கதை நடக்கும் காலம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பான காலம் என்பதை கதைச்சொற்களின் வழியாக மிகத் துல்லியமாக வாசகனுக்குள் கடத்திவிடுகிறார் எழுத்தாளர். எல்லா விவாதங்களும் நடந்து முடிந்தபிறகு நாற்காலிகளைச் செய்வது என்று முடிவாகிறது. நகரத்து தச்சர் செய்த நாற்காலிகள் இரண்டும் அந்தக் கரிசல்காட்டு கிராமத்திற்கு வந்துசேர்கிறது.

நாற்காலி வந்தபிறகு அந்த வீட்டிற்கே தனியழகு கூடிவிட்டதாக குழந்தைகள் மட்டுமல்ல,அந்தவீட்டுப் பெரியவர்களும் நினைக்கிறார்கள். அவர்களுடைய நினைப்பை மெய்யாக்குவதைப் போல ஊரே திரண்டு வந்து அந்த அதிசயப் பொருளைப் பார்த்துத் திரும்புகிறார்கள். யாரும் பார்க்காத பொழுதினில் அந்த நாற்காலியில் ராசாவைப் போல உட்காருவது அந்த ஊரின் பிள்ளை விளையாட்டாக உருமாறிவிட்டது. இது யாவற்றையும் அந்தவீட்டுக் குழந்தைகள் பெருமையாக நினைத்துக்கொள்கிறார்கள். அதன் பளபளப்பும்,வசீகரமும் பக்கத்து ஊரில் பார்த்த நாற்காலிக்குக்கூட இல்லை என்பதில் அந்த வீட்டாருக்கு பெரும் பெருமை.
மாமா வீட்டிற்கு போன நாள் ஒன்றில் குழந்தைகள் கவனிக்கிறார்கள். மாமா வீட்டு நாற்காலியில் மாமாவைத்தவிர வேறு எவரும் உட்காரவில்லை. வீட்டிற்கு திரும்பியவுடன் குழந்தைகள் நாற்காலியினைத் துடைத்து துடைத்து மெருகேற்றுகிறார்கள். எந்த வசீகரமான பொருளையும் சட்டென எதுவுமற்றதாக்கிவிடுவது காலம் நடத்தும் ருசிகரமான விளையாட்டு. அப்படி ஒருநாள் அந்த ஊருக்கும் வருகிறது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் இரவல் வாங்கிப்போய் இந்த நாற்காலியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த ஊரில் ஒரு கல்யாணச்சாவு நிகழ்ந்து விடுகிறது.
மரணித்த மனிதரை ராஜாவைப் போல அமரச்செய்திட நாற்காலியைப் பயன்படுத்திவிட்டார்கள். பிறகென்ன அந்த ஊரில் எங்கு பிணம் விழுந்தாலும், அதனை இறுத்தி வைத்திடும் வாகான ஆசனமாகிவிட்டது அந்த நாற்காலி. வீட்டிற்கே அழகையும் பெருமையையும் கொண்டுவந்து சேர்ந்த இந்த நாற்காலி சாவு வீட்டுப் பொருளாக உருமாறும் என அந்த ஊரில் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். எந்தப் பொருளுக்கும் அததற்கான காலம் என ஒன்று இருக்கவே செய்கிறது. தங்களுடைய வீட்டின் பெருமைகளில் ஒன்றாக இருந்த நாற்காலி இன்றைக்கு அதன் பெருமையை இழந்து வீட்டு மூலையில் முடங்கிவிட்டது.
முக்காலி தன்னோடு நாற்காலியும் சேர்ந்துகொண்டு மூலையில் முடங்கி கிடப்பதை எப்படி எதிர்கொண்டது எனத் தெரியவில்லை. பிறகு என்ன? அந்த ஊரில் மரணம் நிகழ்வதும் அந்த வீட்டிற்கு நாற்காலி பயணம் போவதும் இடைவிடாமல் நடந்து கொண்டேதான் இருந்தது. அதன்பிறகு நாற்காலியை குழந்தைகள் தொட்டுக்கூட பார்ப்பதில்லை. இறந்தவர்களின் உடல்கள் படிந்து படிந்து அந்த வசீகர நாற்காலியின் மீது சவக்களை படிந்துவிட்டது. பளபளப்பு ஏறிக்கிடந்த வசீகர நாற்காலி சட்டென ஒருநாளில் அதன் அத்தனை வசீகரங்களையும் இழந்துபோகிறது. நள்ளிரவில் எந்த வீட்டிலாவது மரணம் விழுந்துவிட்டால் குழந்தைகளின் வீட்டுக்கதவுகள் நாற்காலிக்காக தட்டப்படுவதும் தொடர்கதையாகிப் போனது. கொண்டாடி கூத்தாடி கொண்வரப்பட்ட பொருள்தான்,ஆனால் இன்றைக்கு அது கேட்பாரற்று மூலையில் முடங்கிக்கிடக்கிறது. நாற்காலி எனும் கி.ராவின் இந்தச்சிறுகதை வெறும் நாற்காலியைப் பற்றிய கதை மட்டுமல்ல.
– ம.மணிமாறன் (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



