
பரந்து கிடக்கும் இந்த உலகில் உயிரிகளின் உணர்வுகள் தனித்தனியானவை. மனம், உடல் இவையிரண்டும் சேர்ந்தே இயக்கம் பெறுகின்றன. அதிலும் பெண்ணுடலின் மர்மங்களும்,விசித்திரங்களும் கதைகளாலும் கடத்த முடியாதவையாக இன்றுவரையிலும் நீடித்தே இருக்கின்றன. பெண்ணை அவளின் இருப்பிடத்தை அவளின் புலங்கு வெளிகளை வடிவமைப்பதில் சடங்குகளுக்கும், அவற்றை உற்பத்தி செய்யும் மத நிறுவனங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. வயது வளரத் துவங்கும்போது அவளுடைய உடலும் வளரத்தானே செய்யும். அப்போது அதன் விசித்திர மர்மங்களை எதிர்கொள்ள பெண்உலகம் எப்படியெல்லாம் தடுமாறுகிறது.
இதனை வெளிப்படையாகச் சொல்வதற்கான இலக்கியச்சூழல் தமிழ் படைப்புலகில் தொன்னூறுகள் வரையிலும் உருவாகவில்லை. அப்போதும்கூட கவிதாயினிகளே காத்திரமாக தங்களுக்கு மட்டுமேயான உடல்சார் அவஸ்தைகளை கவிதைகளாக உருமாற்றினர். அன்று மட்டுமல்ல இன்றுவரையிலும் பெண் எழுத்தாளர்கள் கதைகளாகவோ, நாவலாகவோ இந்த தனிப்பாடு பொருளை தங்களுடைய படைப்புகளில் கைக்கொள்ளவில்லை. அந்த நாட்களில் இலக்கியத்தில் பதிவுறுத்த வேண்டிய தனித்த உடல்சார் துயரங்களை, கொண்டாட்டங்களைக் கதைகளாக்கிட எவரும் முன்வராத போது. அதனை தன்னுடைய சிறுகதைகளில் பரிசோதனை செய்தவர் எழுத்தாளர் உமாமகேஸ்வரி.
எழுத்தாளர் உமா மகேஸ்வரியின் படைப்புலகம் முழுக்க பெண்களே ராஜ்ஜியம் செய்கிறார்கள். அவருடைய தொலைகடல் தொகுப்பின் கதைகளில் உலவிடும் பெண்களின் ஆளுமை தனித்துப் பேச வேண்டியது. அப்படித்தான் அவருடைய நாவலான ‘யாரும் யாருடனும் இல்லை’ எனும் கதையுலகும். அவருடைய ‘மரப்பாச்சி’ எனும் கதை தமிழில் பேசாப் பொருளை பேசத் துணிந்த மிக மிக அபூர்வமான கதை. அவருடைய சிறந்த கதை மட்டுமல்ல. தமிழின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று ‘மரப்பாச்சி’.
மரப்பாச்சி என்பது ஒரு பொம்மை என்பது நமக்குத் தெரியும். மரத்திலான அந்த பொம்மையின் வசீகரம் அலாதியானது. கோயில் சிலைகளைப் போலான கச்சித வடிவிலும் இருக்காது, ஒரே போல அச்சடித்துத் தரப்படுகிற பிளாஸ்டிக் பொம்மைகளைப் போல உயிர்பற்றும் இருக்காது. இரண்டிற்கும் நடுவில் விரும்பித் தொட்டால் உயிர் பெற்று நடமாடுமோ பொம்மை என யோசிக்க செய்யும் வகையில் அதற்கேயுரிய தனித்த உடலமைப்புடன் இருக்கும். பெரும்பாலும் மரப்பாச்சிகள் பெண் பொம்மைகளாகத்தான் இருக்கும். அப்படியான பொம்மை ஒன்றை அனு எனும் எட்டுவயது குழந்தையின் தகப்பன் பரணில் இருந்து தேடி எடுத்துத் தருகிறார்.
அதனைப் பார்த்தபோது பெரும் பரவசம் அனுவுக்குள் ஏற்படுகிறது. “ வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் மறைத்த கண்கள். உறைத்த உதடுகள், ஹை பின்னல்கூட போட்டிருக்குப்பா” என பரவசமாகிறாள் குழந்தை. ஏற்கெனவே அனு எனும் எட்டுவயது குழந்தையைச் சுற்றி மரச்செப்புச் சாமான்கள்,கரண்டிகள் என எதிர்காலத்தில் அவளுக்குள் நிறையப்போகும் மாதிரிச் சமையலறையை வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். பிறப்பில் இருந்து இறப்பு வரையிலும் நீ பெண்,நீ பெண்தான் என்பதை ஒவ்வொரு நொடியிலும் சொல்லிக்கொண்டு இருக்கிற உலகமிது. அனுவின் அம்மா அடுக்களையிலேயே உழல்கிறாள். ‘அம்மா நான் உன்னோட மடியில படுத்துக்கிடட்டுமா? ஆசையா இருக்கு’ எனச் சொன்னால். ‘ஆமா நீ பச்சைப்புள்ளையா?கழுதை வயசாயிருச்சு. பேசாம தனியாப்படு’ என்கிறாள்
அம்மா. அப்பா சொல்லும் கதையில் ஏம்பா இந்த ராஜா யாருன்னு கேட்டா, அடிக்கழுதை அனு நீ என்ன பெரிய மனுஷியாட்டம் கேள்வியெல்லாம் கேட்கிற. சின்னப்புள்ளையாட்டம் பேசாம கதை கேட்கனும், புரியுதா என்கிறார்.அனு மரப்பாச்சியோடு ஒதுங்கிவிடுகிறாள். “ நீயே சொல்லு மரப்பாச்சி நான் சின்னவளா, அல்லது அம்மா சொல்வது போல பெரியவளா?”. மரப்பாச்சி அனுவின் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் திரு திருவென முழிக்கும். குடும்பங்களில் பெண் குழந்தையை தனித்து விடும்போது குழந்தைகள் என்னவாகவெல்லாம் உருமாற்றம் அடைகிறார்கள் என்பதை கதைகளே கண்டுபிடித்துச் சொல்கின்றன.
அனுவிற்கும், மரப்பாச்சிக்குமான நட்பும்,நெருக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. மரப்பாச்சிக்கும் அவளுக்குமான உறவு கதைகளால் வளர்கிறது. அனு சொல்லும் எல்லாக் கேள்விகளுக்கும் ஆமாம் சாமி போடும் அளவிற்கு வளர்ந்தது அவர்களின் உறவு. மரப்பாச்சி மட்டுமே அவளுடைய ரகசியம் அறிந்த ஒரே ஜீவன். அனுவின் உடலில் ஏற்படுகிற சின்ன சின்ன மாற்றங்களையெல்லாம் மரப்பாச்சியிடமே சொல்கிறாள். ஒருநாள் பாத்ரூமில் தனித்து குளிக்கும்போது மேடிட்டு இருப்பதைப் பார்த்தவுடன் குறு குறுவென அதைக் குளியலறைக் கண்ணாடியில் பார்க்கிறாள். லேசாக அவளுடைய கை அங்கே பட்டபோது பரவசமும் கிளர்ச்சியும் அவளுக்குள் பொங்கிப் படர்கிறது.
யாரிடம் இதைச் சொல்ல,அவளே தனியாகத்தானே இருக்கிறாள். மரப்பாச்சியிடம்தான் சொல்கிறாள். அதுவும் உம் கொட்டி கேட்டதோடு மட்டுமல்லாமல்,லேசாக அவளுடைய கன்னத்தை வருடுகிறது. அய்யய்யோ என்ன இப்படி வெட்கம், வெட்கமாக வருது எனக்கு என தன்னுள் தடுமாறுகிறாள் அனு..அம்மா கவனிக்கத் துவங்கிவிட்டாள்.
எப்போதும் மரப்பாச்சியைக் கட்டிக்கொண்டே கிடக்கும் மகளை நெருங்க அவள் முயற்சிக்கும் போதெல்லாம் அவள் விலகி விலகிப் போகிறாள். தூங்கும்போதும் மரப்பாச்சியுடன் தூங்கத் துவங்கினாள். மரப்பாச்சிக்கு இப்போதெல்லாம் மீசை முளைக்கத் துவங்கியிருப்பது அனுவிற்கு மட்டுமே தெரியும். அம்மாவிற்கு தெரியாதா?அவளும் அனுவின் வயதில் இதே போலான உடல் மனது மாற்றங்களை கடந்துதானே வந்திருப்பாள். இப்போதெல்லாம் அனு பள்ளிக்கூடம் கிளம்பி வெளியேறும்போது அம்மா அவளுடைய மேலாடையைச் சரி செய்கிறாள்.

அனு பள்ளி விட்டு வீடு வந்துசேர கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் வீட்டிற்கும் வாசப்படிக்கும் பதட்டமடைந்து தெருவாசலையே வெறித்துப் பார்க்கிறாள். இரவெல்லாம் அனு அந்த மரப்பாச்சியுடன் உறைந்து கிடப்பதையும், அனுவின் உடல் அடைந்து கொண்டிருக்கும் மாற்றங்களையும் சேர்த்தே கவனிக்கிறாள். இது பெண்கள் மட்டும் தெரிந்து வைத்திருக்கும் பெண் உலகு. அதன் நுண்ணிய தடங்களை உமா மகேஸ்வரி கண்டடைந்து சொல்கிறார் தன்னுடைய மரப்பாச்சி கதையில்.
அனு வயதுத் தோழிகள் அவளை வா விளையாடலாம் என்று அழைத்தபோது அவள் மறுத்து விடுகிறாள். தொலைக்காட்சி பெட்டியில் ஆடும் எந்த வண்ணக்கலவை ஒளிகளுக்கும் அனுவை ஈர்த்து வசீகரிக்கும் திறன் இல்லை. கட்டிலில் படுத்து மரப்பாச்சியை உற்றுப் பார்த்த நாள் ஒன்றில் மரப்பாச்சியின் முலைக்காம்புகள் உதிரத் தொடங்கின. மெல்லிய அரும்பு மீசை துளிர் விடத்துவங்குகிறது. இனி அவள் இல்லை அது. மெதுவாக அவளை வசீகரித்துக் கிறக்கும் ஆணாக மாறிவிடுகிறது மரப்பாச்சி. அது மெதுவாக நகர்ந்து வந்துஅனுவை ரசித்து அருந்தி மகிழத்துவங்கியது. இந்தப்புது விளையாட்டு அனுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. அடிக்கடி இரவுகளில் மரப்பாச்சியும் அனுவும் இந்த விளையாட்டில் விரும்பி லயிக்கிறார்கள்.
அனுவின் அம்மாவிற்கு எல்லாம் புரியத்துவங்குகிறது. அனுவின் தந்தையிடம் இதுபற்றி அம்மா எதுவும் சொல்லவில்லை. எப்படிச் சொல்லி புரிய வைப்பது. ஆண்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாத பெண்களின் அகஉலகம் விசித்திரங்களும், மர்மங்களும் நிறைந்தது. அனுவிற்குள் மரப்பாச்சி நிறைகிற இரவுகளை அவள் விரும்பி ரசிக்கத் துவங்கினாள். அந்த இரவுகளின் அதீத கணங்கள் பகல் விடிந்த பிறகும் நீடித்திருப்பது அவளுக்கு பெரும் ஆச்சர்யத்தை தந்தது. பள்ளிவிட்டு வந்தவுடன் ஏன் லேட் என அரற்றுவதும், அம்மா இல்லாத நேரத்தில் ஓடிவந்து அவளுக்கு முத்தம் தருவதும். இரவில் அவளுடைய போர்வைக்குள் வம்படியாக நுழைவதையும் அவளால் தடுக்க முடியவில்லை. அம்மா அவளையும், மரப்பாச்சியையும் எப்படி பிரிப்பது எனத் தெரியாமல் தடுமாறத் துவங்கினாள்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அவர்களின் வீட்டுக்கு வந்த அத்தை அனுவை தன்னோடு அழைத்துப்போக விரும்புவதாகச் சொல்கிறாள். அம்மா அய்யோ மதினி இருக்கட்டும் எனப் பதறுவதை அனுவும்தான் பார்த்தாள். அத்தை எங்க வீட்ல அனு பெரிய மனுஷியாகட்டும், இப்ப என்ன என்கிறாள். அனுவிற்கும் அத்தை வீட்டிற்குப் போக பெரும் விருப்பமே. தன்னுடைய ஆடைகளைப் பெட்டியில் அடுக்குகிறாள் அனு. மறக்காமல் மரப்பாச்சியை பெட்டிக்குள் எடுத்து வைக்கிறாள் அனு. அனு அத்தை வீட்டில நிறைய பொம்மை கெடக்கு, அதவச்சு விளையாடலாம். இந்த மரப்பொம்மை எதுக்கு எனச் சொல்லி வைத்துவிடுகிறாள். அனுவிற்கு மட்டுமல்ல, மரப்பாச்சிக்கும்கூட பிடிக்கவில்லை.
மரப்பாச்சி அவளை முறைத்துப் பார்த்தது. அனு நான் என்ன செய்ய முடியும் என அத்தையுடன் போகத் துவங்கினாள். அந்தப்பயணம் அனுவிற்கு மிகவும் பிடித்திருந்து. அம்மா விரும்பி அணிவித்து அனுப்பிய கரும்பச்சை நிறை பாவாடையில் பேரழகில் இருப்பதாக அத்தை பரவசப்பட்டாள் . ஆனால் எல்லாம் அத்தையின் வீட்டை அடைந்த நொடியில் காணாமல் போய்விட்டது. வீட்டில் இவளை மாமா பார்த்த பார்வை இவளுக்கு பெரும் கூச்சமாக இருந்தது. அவர் பார்வை படும் இடங்களை எதேச்சையாக கவனித்தாள். எதற்கு இப்படி பார்க்கிறார். அனு அதுக்குள்ள இப்பிடி சொல்லாம கொள்ளாம வளர்ந்துட்டாள்ல, என்றபடி அவருடைய கைகள் ஊடுருவிப் பரவியதை அனுவுக்கு மட்டுமல. அத்தைக்கும்தான் பிடிக்கவில்லை.அவள் குழந்தை, வளர்கிறாள். அவ்வளவுதான்.
எப்போதும் எத்தனை வயதானாலும் ஆண் தன்னிலிருந்து துருத்தி வெளிப்பட்டு விடுகிறான். மனிதர்கள் தங்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆண் வக்கிரத்தை மீற முடியாமல் அல்லது அதனை மிதித்து தள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். பெண் உலகம் அது அப்பாவாக இருந்தாலும், அண்ணணாக இருந்தாலும்,மாமா ,சித்தப்பா என எவராக இருந்தாலும் கண்டுபிடித்துவிடும் இந்த ஆண் வக்கிரத்தை. காமம் பித்தேறிக் கடக்க முடியாமல் தடுமாறும்போது அது யாரும் புரிந்து கொள்ள முடியாத எல்லைகளைக் கடக்கிறது. தடித்த மாமன் இரவினில் எல்லை கடக்கிறான். அனுவால் அதை எதிர்கொள்ளவே முடியாமல் தடுமாறுகிறாள். அத்தை விழித்து மிரட்டிய அந்த நொடியையும், மாமாவின் விரல்களும், நொதித்துப் படர்ந்த அந்த குரூர உடல் தன்னுள் ஏற்படுத்திய அச்சத்தில் இருந்தும் வெளியேற முடியாமல் தடுமாறினாள் அனு.
அதன்பிறகு அவள் அத்தையின் வீட்டில் இருக்கவில்லை. அன்றே வீடடைகிறாள். அத்தையும் எதுவும் சொல்லவில்லை, அம்மாவும் எதுவும் கேட்கவில்லை. எதுவோ ஒன்று இருவருக்கும் புரிந்தே இருக்கிறது என்பது அவர்களின் கண்களில் நிழலாடியதை அனு கவனிக்கவே செய்தாள். அவள் வீட்டிற்குள் நுழைந்து அவளுடைய மரப்பாச்சியைப் பார்த்தாள். அதற்குள் நிறைந்திருந்த ஆண் இப்போது இல்லை. பரிபூரணமான பெண்ணாகிப் போனது மரப்பாச்சி. ஏன் பெண் ஆனது என்பதையெல்லாம் வாசகரே தனக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். பெண்களின் வயதும் உடலும் சமப்படும் புள்ளிகளைக் கண்டறிந்து கதையாக்குவது ஒன்றும் எளிதில்லை. அந்த அசாத்திய சவாலை தன்னுடைய மரப்பாச்சி கதையில் எதிர்கொண்டு கதையாக்கியவர் எழுத்தாளர் உமா மகேஸ்வரி.
–ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



