எளிதாக இலக்கணம் கற்கலாம்: அலுப்பின்றி யாப்பு – 19

நாம் தற்பொழுது சிந்துப் பாடல்களைப் பற்றிப் பார்த்து வருகிறோம். இன்றும் சிந்துப் பாடல்களின் சில வகைகளைப் பார்ப்போம்.

ஆனந்தக் களிப்பு

ஆனந்தக் களிப்பு என்பது இறையனுபவத்தைப் பெற்றவர்கள் மகிழ்ச்சி மிகுதியில் பாடும் பா வகை. அமைப்பில் நொண்டிச் சிந்தை ஒத்தது. இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு யாதெனில்: நொண்டிச் சிந்து நான்மை நடையில் வரும். ஐந்தாம் சீரிலும் ஏழாம் சீரிலும் எதுகை பெற்று வரும். ஆனால் ஆனந்தக் களிப்பானது மும்மை நடையில் வந்து ஐந்தாம் சீரிலும் ஏழாம் சீரிலும் மோனை பெற்றுவரும். மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார், சித்தர்கள் போன்றோர் ‘ஆனந்தக் களிப்பு’ என்ற பெயரில் தங்கள் இறையனுபவத்தை வெளிப்படுத்தினர்.

எட்டெட்டுச் சீர்களைக் கொண்ட இரண்டு அடிகள் ஓரெதுகை பெற்று வரும். நான்காம் சீர் தனிச்சொல்லாக வரும். ஐந்தாம் சீரில் அடி மடக்கி எழுதப்படும். ஒன்றாம் சீரிலும் ஐந்தாம் சீரிலும் ஏழாம் சீரிலும் மோனை வரவேண்டும். மூன்றாம் சீரிலும் எட்டாம் சீரிலும் இயைபுத் தொடை அமைய வேண்டும். இவ்வாறு அமையும் பாடல் பாடுதற்கு இனிமையாக இருக்கும்.

(உ-ம்)

பாபஞ்செய் யாதிரு மனமே- நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
சாபங்கொடுத்திட லாமோ? – விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ?

நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி — அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி — மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
– கடுவெளிச் சித்தர்

லாவணி
லாவணி என்ற சொல்லுக்கு, மராட்டி மொழியில் நாற்று நடுதல் என்ற பொருள் உள்ளது. வயலில் வேளாண் பணி புரியும் பெண்கள், உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க, ஒருவருக்கு ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் விதமாக, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் நிறுவுகின்றன.

மராட்டியர்கள், தஞ்சையை ஆண்ட காலகட்டத்தில், இக்கலை வேகமாக தமிழகமெங்கும் பரவத்தொடங்கிற்று. இக்கலையில் மேடையில் இருவர் எதிர் எதிர் அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து விவாதிப்பது போலப் பாடுவர்.

(உ-ம்)

சாதிகள் பெரியதென்று
வாதிடும் கயவர்களின்
தத்துவங்கள் என்னவென்று சொல்லு! சொல்லு!
ஆதியில் மநுதருமம்
ஓதிய சதுர்வருண
ஆணைகள் அவைகளெனக் கொள்ளு! கொள்ளு!

இந்துத்துவம் இன்றுவந்து
சிந்திடவே செய்கிறது
இந்தியர் குருதியினை பாரும்! பாரும்!
நொந்துபோன மானிடரின்
சிந்தையிலே மதவெறி
நுட்பமாகத் தினம்தினம் ஏறும்! ஏறும்!

ஆணவக் கொலைகள்செய்யும்
ஈனர்கள் இருக்கிறார்கள்
ஆயிரமாய்த் தானேயிந்த நாட்டில்! நாட்டில்!
வீணர்பலர் சாதிகளைப்
பேணவே சாதிகளுக்குள்
வீண்சண்டைகள் மூட்டுகிறார் ரோட்டில்! ரோட்டில்!

கோமியம் புனிதமென்று
சாமிகள் உரைப்பதாகக்
கூறுகிறார் இங்குசிலர் கூடிக்! கூடி!
பூமியில் அதையும்நம்பி
சேமித்த அறிவைவிற்று
போகிறார் சிலர்பசுவைத் தேடித்! தேடி!
கும்பிடும் கடவுளெனக்
கொம்புள்ள பசுக்களையே
கொண்டிருப்பார் வைதிகரும் பாரில் பாரில்!
தெய்வமெனப் பசுக்களை
வைதிகரும் சொல்லிக்கொண்டு
சனங்களைக் கொல்லுகிறார் ஐயோ! ஐயோ!
வையகம் தனில்எளியோர்
கைநிறைய வாங்கவுண்டு
மாட்டிறைச்சி மட்டுமெனில் பொய்யோ! பொய்யோ!

மண்ணிலே சமத்துவத்தைக்
கண்ணென வளர்ப்பதற்கு
மார்க்சிஸம் இருக்கிறது தம்பி! தம்பி!
திண்ணிய தோளைநிமிர்த்தி
விண்ணதிர கோஷமிட்டு
சீறிடுவாய் நீயும்அதை நம்பி! நம்பி!
-மனோந்திரா

லாவணி எண்சீர்க் கழிநெடிலடிகள் இரண்டு கொண்டிருக்கும். இரண்டடிகளும் ஓரெதுகை பெற்றுவரும். ஏழாம் சீரும் எட்டாம் சீரும் ஒரே சொல்லாக இருக்க வேண்டும். இப்பாடல் நான்மை நடையைக் கொண்டிருக்கும். அடி எதுகையோடு ஒவ்வொரு அடியிலும் முதற்சீரும் மூன்றாம் சீரும் எதுகை பெற்றுவரும். முதற்சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும். இந்த இலக்கண வரையறை எதுவுமின்றித் திரைப்படங்களில் ஒருவர் கேள்வியைத் தொடுக்க மற்றொருவர் பதில் கொடுப்பது போன்று பல லாவணிப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மிகவும் புகழ்பெற்ற பாடல் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
இயற்றியவர்: கிளவுன் சுந்தரம்
இசை ஜி.ராமநாதன்
பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே
சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்
ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்
யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
புறப்பட்ட கதை போலே அல்லவா தற்புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா
ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்
ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி
பதில்.. சொல்றேன்
எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
சொல்லிட்டான்! இரு
கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே
ஹஹங் ஹங் சர்தான் ம்
அன்ன சத்திரம் இருப்பதெதனாலே-பல
திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்
பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே
தம்பி இங்கே கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே
சொல்லிப் புட்டியே!
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சர்தான் சர்தான் சர்தான்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கத்தி இல்லே கோடாலி இல்லே
ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!

ஒப்பாரி
உறவுகளை இழந்தவர்கள் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும். இந்த ஒப்பாரியும் சிந்துப் பாடல் வகைகளில் ஒன்றாகும். இது எத்தனை அடிகளில் வேண்டுமானாலும் பாடப்படும். அடிப் பெருக்கம் மோனையால் தொடுக்கப்பட்டுக் கொண்டே போகும். இது பெண்களால் மட்டுமே இன்றுவரை பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(உ-ம்)

1)காலை சிவந்திப்பூ
கசங்காத மல்கைப்பூ- நான்
கலந்து முடிக்குமுன்னே- என்
கருணரைக் கொள்ளையிட்டேன்
மாலை சிவந்திப்பூ
வாடாத மல்லிகைப்பூ- நான்
வாரி முடிக்குமுன்னே- என்
மன்னவரைக் கொள்ளையிட்டேன்

2)சிவப்புக் கடுதாசி
சேலத்து மைக்கூடு- என்
செல்வக் கணக்கருகா
செந்தமிழில் வல்லவுகா- நீங்க
சிவலோகம் போறமென்னு
சீரா எழுதிவிட்டா- அந்தச்
சேதி யதுகேட்டா
செந்தமிழைக் கண்டுவிட்டா
செவியில் நுழையுமுன்னே- என்
செல்வருட னேநானும்
சிட்டாய் பறந்துவந்து
சீக்கிரமாய் ஓடிவந்து
சித்திரத்தேர் சோடித்து- அந்தச்
சித்திரத்தேர்க் குள்ளாகச்
சீராய்ப் படுக்கவைத்து
செல்வத் தமிழ்பாடி- நான்
தேம்பி அழுதுவிட்டா- அந்தத்
தெருவே திரண்டுவந்து
சேர அழுதிடுமே- அந்த
சிவலோகம் கேட்டிடுமே.

இதே பாணியில் அமைந்த திரைப்படப் பாடல் ஒன்று:

திரைப்படம்: தெய்வத்தின் தெய்வம்
இசை: ஜி. ராமநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா

பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ- அது
பாதியிலே நின்னுப்போச்சே ஏலேலோ
பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ
அது பாதியிலே நின்னுப்போச்சே ஏலேலோ
பேச ஒரு கிளியெடுத்தேன் ஏலேலோ- அது
பேசுமுன்னே செத்துப்போச்சே ஏலேலோ
நாலு பேரு கூடிநிற்கும் மேடையிலே ஏலேலோ-என்
நாடகமும் முடிஞ்சுபோச்சே ஏலேலோ
ஆசை நெஞ்சில் தோணிவிட்டேன் ஏலேலோ-அது
ஆழம்கூடத் தெரியவில்லையே ஏலேலோ
காத்திருந்தேன் விடியும்கண்ணும் ஏலேலோ
விடிவதற்குள் விடியலொன்று மறைஞ்சுபோச்சே ஏலேலோ
பூத்தமலர் காயானதே ஏலேலோ-அந்தப்
பூங்குமரி வாடிநின்றாள் ஏலேலோ
மனோந்திரா (தொடரும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *