
சிந்துப்பாவில் இயைபுத் தொடையின் பங்கு
சிந்துப்பாவில் இயைபுத் தொடை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. மற்ற பாடல்களில் (அதாவது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகிய வற்றோடு அவற்றின் இனங்கள்) மோனையும் எதுகையும்தான் முக்கியம். இயைபுத் தொடை கட்டாயம் இல்லை. அமைந்தால் நல்லது. அமையாவிட்டால் பரவாயில்லை. ஆனால் சிந்துப்பாவைப் பொறுத்தவரை மோனைத் தொடை, எதுகைத் தொடையோடு இயைபுத்தொடையும் கண்டிப்பாக அமைய வேண்டும்.
அடிதோறும் இயைபு வரவேண்டும்.
(உ-ம்)
நந்த வனத்திலோ ராண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி- மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
– கடுவெளிச் சித்தர்
மேற்கண்ட பாடலில் அனைத்து அடிகளுமே “ண்டி” என்ற இயைபு கொண்டு முடிந்துள்ளன. திரைப்படப் பாடல்கள் அனைத்துமே மோனை, எதுகை இன்றிக்கூட அமையும். ஆனால் இயைபுத் தொடையின்றி அமையவே அமையாது.
(உ-ம்)
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே
மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே
விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே
சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
-கவியரசு கண்ணதாசன்
மேற்கண்ட பாடலில் உள்ள அனைத்து வரிகளும் “மே” என்ற இயைபு பெற்று முடிந்துள்ன. மேலும் பெரும்பாலான இடங்களில் மோனை சிறப்பாக அமைந்துள்ளது.
பலவகை சிந்துப் பாடல்கள் உண்டென்தை முன்னறே பார்த்தோம். அவற்றை ஒவ்வொன்றாகச் சுருக்கமாகப் பார்ப்போம்.
காவடிச் சிந்து
காவடிச் சிந்து என்பது பண்டைய காலத்திலிருந்து தமிழ் மக்களால் பாடப்பட்டுவரும் ஒருவகை நாட்டுப்புறப் பாடலாகும். இது முருகப் பெருமானுக்குப் பாற்குடம் கொண்டு செல்வோர் காவடியாட்டம் ஆடிக்கொண்டு பாடிச்செல்லும் பாட்டாக இருந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் தாலுகாவில் இருக்கும் சென்னிகுளத்தைச் சேர்ந்த அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சித்துவின் தந்நை என்று கருதப்படுகிறார்.
சிந்து என்ற நாட்டுப்புறப் பாடல் பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணங்கள் என்னும் மூன்று உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு வகையான காவடிச் சிந்து சரணங்களை (கண்ணிகளை) மட்டும் கொண்டு அமையும். சிந்துப்பாவின் அடிகள் எட்டுச் சீர்களையோ அல்லது அற்குமேல் இரட்டைப் படையில் பல சீர்களையோ கொண்டிருக்கும்.
உதாரணங்கள்:
நான்மை இனத்திலும் ஏக தாளத்திலும் அமைந்த நான்மை நடைப் பாடல். 24 சீர்களைக் கொண்டது.
1)காலமாம் வனத்தில், அண்ட கோலமா மரத்தின் மீது,
காளிசக்தி என்ற பெயர் கொண்டு – ரீங்
காரமிட்டுலவும் ஒரு வண்டு – தழல்
காலும், விழி நீல வண்ண மூலஅத்துவாக்கள்
கால்கள் ஆறுடையது எனக் கண்டு- மறை
காணும் முனிவோர் உரைப்பார் பண்டு.
மேலுமாகி, கீழுமாகி, வேறுள திசையுமாகி,
விண்ணும் மண்ணும் ஆன சக்திவெள்ளம் – இந்த
விந்தையெல்லாம், ஆங்கது செய் கள்ளம் – பழ
வேதமாய், அதன் முன்னுள்ள நாதமாய், விளங்குமிந்த,
வீர சக்தி வெள்ளம் வீழும் பள்ளம் – ஆக
வேண்டும், நித்தம் என்றன் ஏழை உள்ளம்
அன்புவடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
ஆக்க நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை
ஆய்ந்து, உணர்ந்தவர்க்கு உண்டு உய்கை – அவள்
ஆதியாய், அநாதியாய், அகண்ட அறிவாவள், உன்றன்,
அறிவும் அவள் மேனியிலோர் சைகை – அவள்
ஆனந்தத்தின் எல்லையற்ற பொய்கை.
இன்ப வடிவாகி நிற்பள், துன்பெலாம் அவள் இழைப்பள்,
இஃதெலாம் அவள் புரியும் மாயை – அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை – எனில்
எண்ணியே, ஓம்சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவர் மெய்ஞானம் எனும் தீயை -எரித்
தெற்றுவார் இந் நான் எனும் பொய்ப் பேயை
– மகாகவி பாரதியார்
24 சீர்களைக் கொண்ட ஆதி தாளத்தில் அமைந்த மும்மை நடைப் பாடல்.
வன்னத் தினைமாவைத் தெள்ளியே – உண்ணும்
வாழ்க்கைக் குறக்குல வள்ளியே! – உயிர்
வாங்கப் பிறந்திட்ட கள்ளியே! – இரு
வட மேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலை படீர்எனத் துள்ளியே – விழ
வான்மதி வீசும்தீ அள்ளியே.
-அண்ணாமலை ரெட்டியார்
தங்கச் சிந்து
புலவர் குழந்தை அவர்கள் தங்கச் சிந்துவிற்குக் கீழ்க்கண்ட உதாரணங்களைத் தனது ‘யாப்பதிகாரம்’ என்ற நூலில் தந்துள்ளார்.
மெய்ஞானத் தங்கம் மேலான தங்கம்
அஞ்ஞானத் தங்கமெல்லாம்- என் தங்கமே
ஆகாத தங்கமடி
இது நாலிருசீ ரட்டை. எடுப்பு, எதுகைத் தொடையால் அமைந்தது.’’என்தங்கமே’ என்பது தனிச்சொல்.
செங்கரும்பை வாங்கி திருக்கையிலே தாங்கி
அங்கசவே ளோட அவன் செயலைப் பாட
மங்கையர்கள் கூடி மணாளரு டனாடாத்
தெங்கிளநீ ருன்பாரடி- என்தங்கமே
தெருவில் திரிவாரடி
இது மூன்றடி நாலிருசீரிட்டை. எடுப்பு, ஓரெதுகையான் அமைந்தது.
வழிநடைச் சிந்து
வழிநடைச் சிந்து என்பது தமிழ் சிந்து இலக்கிய வகைகளில் ஒன்றாகும். நீண்ட தூரம் பயணம் செய்யும்போதோ அல்லது புனித யாத்திரை செல்லும்போதோ, களைப்பு தெரியாமல் இருக்கவும், பயணத்தில் இறையருளைச் சிந்திக்கவும் பாடப்படும் எளிய பாடல்கள் இவை.
(உ-ம்)
சபரிமலை ஐயப்பன் வழிநடைச் சிந்து
சாமியே ஐயப்போ! ஐயப்போ! சாமியே!
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு!
கற்பூர ஜோதி சுவாமிக்கே!
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!
நெய் அபிஷேகம் சுவாமிக்கே!
தேன் அபிஷேகம் சுவாமிக்கே!
வில்லாளி வீரனே! வீரமணி கண்டனே!
வில்லாளி வீரனே! வீரமணி கண்டனே!
தாங்கி விடப்பா! ஏந்தி விடப்பா!
தூக்கி விடப்பா! ஏற்றம் கடினம்!
இப்பாடல் மும்மை நடையில் அமைந்துள்ளது.
கோபுர மீதுபுறாச் சோடி- நம்மைக்
கூப்பிடுதே வாவெனக்
குமரனைக் கொண்டாடி
நூபுர வோதையவிந் தோடி- கதிர்
நூலென விடந்தொறு
நுடங்கிடை நீவாடி
-வெள்ளக்கோயில் வழிநடைச் சிந்து
இப்பாடல் நான்மை நடையில் அமைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு சீரிலும் நான்கு சிந்தசைகள் (சாதாரண வார்த்தையில் சொல்வதானால் ‘’எழுத்துக்கள்”) இருக்கும். எழுத்துக் குறையும் இடங்களில் அருகிலுள்ள மெய்யெழுத்தோ அல்லது நெடிலெழுத்தோ அளபெடுத்து ஓசையை நிறைவு செய்யும்.
வளையற் சிந்து
(உ-ம்)
சதியெனவே பிரித்தனரே
சாதியினை இங்கு – மதச்
சாய்க்கடையின் பங்கு – துயர்
சாய்த்திடவே தங்கு – நாம்
தகர்த்தெறிய பலதடைகள்
தழைத்திருக்கு மிங்கு.!
விதியெனவே புலம்பிடாமல்
விழித்தெழுவோம் இன்றே- மறம்
விதைத்திடுவோம் நன்றே – சதி
வினையறுப்போம் சென்றே – துயர்
விலக்கிடுவோம் எனமுயன்றால்
விலகிடுமே அன்றே!
– பாவலர் மா.வரதராசன்
மேற்கண்ட பாடல் வகை “வளையற்சிந்து”ஆகும். இது ஐம்மை நடையில் அமைந்துள்ளது.
வள்ளித் திருமண நாடகத்தில் முருகன் வளையல் விற்போனாக வந்து பாடும் பாடலாதலால் இப்பெயர் பெற்றது.
அண்ணாமலை ரெட்டியாரின்,
“வாருமையா வளையற்செட்டி … என்ற பாடல் இவ்வகையே.
கிராமியக் கூத்துகளில் இப்பாடல் அதிகளவு இடம்பெறும்.
தாலாட்டு
இது குழந்தைகளைத் தூங்க வைக்கவும் அமைதிப் படுத்தவும் கால காலமாகப் பெண்களால் வாய்மொழியாகப் பாடப்பட்டுவரும் ஒரு நாட்டுப்புறப் பாட்டாகும். இது ஆசிரியப்பாவின் சாயலில் அகவலோசை கொண்டு பாடப்படும். ‘தால்’ என்ற சொல்லுக்கு நாக்கு என்று பொருள். நாவால் பாடப்படுதலின் தாலாட்டாயிற்று.
(உ-ம்)
சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தயையும் நாம் கண் முன்னே காணலாம்.
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
இதில் ‘’ப’ என்ற எழுத்து அனைத்து அடிகளிலும் மோனையாக அமைந்திருப்பது சிறப்பு.
*** *****
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மல்லி பூச் செண்டாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொம்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ
ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
இன்னும் சில முக்கியமான சிந்துபா வகைகளை அடுத்த வாரம் பார்ப்போம். ? – மனோந்திரா (தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/manothindras-learn-grammar-with-easy-16/ லிங்கை கிளிக் செய்யவும்



