தவெக எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா பதவியேற்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் எம்எல்ஏக்களாக இன்று பதவி ஏற்று கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை அமைத்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை விட 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அதேபோன்று, தாராபுரம் தொகுதியிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவை விட 9,471 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றார். இந்நிலையில் சத்யபாமாவும் மரகதம் குமரவேலும் தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழ் உடன் தலைமைச் செயலகத்துக்கு வந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்பு எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *