
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் ஜூன் 2-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று(ஜூலை 25) ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக் தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றியைக் குறிக்கும் இரு விரல்களைக் காட்டியபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் “இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. வீதிகளிலிருந்து நேரடியாக கிடைத்த ஜனநாயகம் இது. அமைதி, பொறுமை மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. மறைமுக அச்சுறுத்தலையும், அது பற்றிய அச்சத்தையும் தூக்கியெறிந்து விட்டு, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எழுச்சி பெற்று நின்ற அனைத்து குடிமக்களுக்கும் எனது நன்றிகள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் நாட்டின் ‘ஜென் ஜி’ இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தார்மீகப் போராட்டம் இப்போது முடிந்துள்ளது. இனி கல்வித் துறை சீர்திருத்தங்களை நோக்கிய பயணம் தொடங்கும்” என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.



