
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்,
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பைக் கண்காணித்து வருகிறோம்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் விரைவில் தொடங்கப்படும். டெங்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கொசுக்களை ஒழிக்க, கொசு மருந்து தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.



