
பேனரில் எனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் விளையாட்டுத்துறை சார்பில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதற்காக விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பேனரில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அவருக்கு அடுத்ததாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி மேடைக்கு வந்த போது பேனரில் அவரது பெயர் இரண்டாவதாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் பேனரில் கீர்த்தனா பெயர் முதலில் இடம் பெற்றது என்று கேள்வி எழுப்பினர்.
ஒரு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் யாரோ, அவர் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்று சொன்ன ஜெகதீஸ்வரி, இந்த மாவட்டத்திற்கு நான் தான் பொறுப்பு அமைச்சர். அப்படி இருக்கும்போது என்னுடைய பெயர் தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும்? ஆனால், அமைச்சர் கீர்த்தனா பெயரை ஏன் முதலில் வைத்தீர்கள்?” என்று மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கேள்வி கேட்டு துளைத்த சம்பவத்தால், விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.



