திமுக எம்எல்ஏ மீது சபாநாயகர் நடவடிக்கை தேவை: அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தல்

விளாத்திகுளம் எம்எல்ஏ மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை விமர்சனம் செய்ததாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்’ என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கெனவே முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்,

சட்டப்பேரவைக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *