
தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் விஜய் கரை சிலர் திடீரென வழிமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் வழக்கம் போல தலைமைச் செயலகத்துக்கு இன்று (செப்டம்பர் 3) காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும், பின்னும் போலீஸாரின் கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புக்கு சென்று கொண்டிருந்தன.
சென்னை மெரினா கடற்கரைச் சாலையான காமராஜர் சாலை வழியாக முதலமைச்சரின் கான்வாய் வந்தபோது, நான்கு பேர் திடீரென முதலமைச்சர் விஜய் காரை வழிமறித்தனர். அப்போது அவர்கள் ‘நீதி வேண்டும்’, ‘நீதி வேண்டும்’ என்று முழக்கமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இதன் பின் தலைமைச் செயலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் கார் சென்றது.
இதனையடுத்து முதலமைச்சர் காரை வழிமறித்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மானாமதுரையில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் குடும்பத்தினர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



