திரைப் பார்வை: மொத ராத்திரி

இந்தப் படம் வெளியான நாளில் மதுரை ‘ஷா’ திரையரங்கின் சாலை வழியாக வண்டியில் சென்றேன். படத்தின் பெயரைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டேன். உலகம் மாறியும் இவங்க மாறவில்லையே என்று, இன்னுமா? இம்மாதிரிப் படங்கள் தியேட்டர்களில் ஓடுகின்றன என்ற வியப்பும், கூடவே மனிதர்கள் கையடக்க சவப்பெட்டியில் இம்மாதிரிப் படங்களில் அடக்கமாகி வெகு காலமாகிற்றே என்ற ஆச்சரியமும் கூட. ஒரு காலத்தில் ‘ஷா’ திரையரங்கும், மதுரை வண்டியூரில் உள்ள ‘பழனி முருகன்’ திரையரங்கும் படு பிரபலம். சுத்துபட்டு எட்டு மாவட்டங்களிலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.

‘மொதராத்திரி’ படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் நல்ல விதமான விமர்சனங்கள் வரத் துவங்கியதும்தான், படத்தைத் தவறாக எண்ணிக் கொண்டேன் என்று வருந்தினேன். கடந்த வாரம் வீட்டில் ஒடிடியில் இந்தப் படத்தை இணையர் போட்டார். என்ன படம் என்று கேட்டேன், ‘மொத ராத்திரி’ என்றார், சரிபார்ப்போம் என்ன தான் சொல்கிறார்கள் என்று உட்கார்ந்தேன். முழுப் படமும் பார்த்த பிறகு தான் எழுந்தேன். சமீபகாலத்தில் ஆபாசமற்று, குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும்படியான நல்ல தமிழ்ப் படம்,

ஒரு திருமண வீட்டில் இருந்து காட்சியைத் துவக்குகிறார்கள். வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக ஏமாற்றி அழைத்து வரப்பட்ட மணமகன், அவனுக்கு திருமணத்தில் உடன்பாடில்லை. அதற்கொரு பின்புலக் காட்சியை படத்தின் இறுதியில் வைத்திருக்கிறார்கள். மணமகளுக்கும் திருமணத்தில் உடன்பாடில்லை. அவள் தனது காதலன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.

காதலன் ஒரு ஜோக்கராக இருக்கிறான். அவன் வரத் தாமதமாக வேறு வழியின்றி கதாநாயகனுக்கு தலையை நீட்டுகிறாள். எப்படியாவது மொத ராத்திரிக்குள் வந்து தன்னை கூட்டிச் செல்லும்படி மன்றாடுகிறாள். காதலனும் பல்வேறு கோணங்கி சேட்டைகள் வழிநெடுக செய்து கொண்டு வருகிறான். பொண்ணும், மாப்பிள்ளையும் அறைக்குள் இருக்கிறார்கள். உறவுகள் அனைத்தும் அறைக்கு வெளியே படுத்துக் கொண்டு கிசுகிசுக்கிறார்கள். மணப்பெண் பாத்ரூம் ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறாள். மாப்பிள்ளை தடுத்து நிறுத்தி கேட்க அவளது காதல் கதையையும், காதலன் தனை மீட்டுக் கொண்டு போக என்ஜின் குதிரையில் வருவதையும் சோகத்துடன் சொல்கிறாள்.

கதாநாயகன் தலையிலடித்துக் கொண்டு மணமகளை அவன் காதலனிடம் சேர்ப்பதற்காக நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். வெளியே படுத்திருந்த இரண்டு வீட்டு உறவுக் கூட்டமும் எழுந்து மணமக்கள் காணாமல் போனதை அறிந்து ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு தேடத் துவங்குகிறார்கள். கிராமத்து கோயிலில் காதலன், மணமக்கள் மூவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே சுவாரசியமான கிளைமாக்ஸ்.

படம் நெடுக போரடிக்காமல் செல்கிறது. ஒரு வெள்ளந்தியான கிராமத்து கூட்டத்தை அசலாக காட்டியிருக்கிறார் இயக்குநர். அவர்களுக்கு இடையேயான அன்பும், பாசமும், நக்கலும், நையாண்டியும், கோபமும், சண்டையும் வெகு யதார்த்தம். நாயகி துடிப்பும் தவிப்பும் மிக்கவராக நடிப்பில் பின்னுகிறார். நாயகன் தோற்றத்தில் முதிர்ந்தவராக தெரிந்தாலும், இறுதிக் காட்சிகளில் மிக எளிதாக ரசிக மனங்களில் நுழைந்து விடுகிறார்.

அப்பாவியாக நடித்திருக்கும் காதலன் தான் இயக்குநர்(ராஜா கருப்பசாமி) என்பதை அறியும் போது, அடப்பாவி என்று வியப்புதான் ஏற்படுகிறது. மிகச் சின்னப் பையனாகத் தெரிகிறார், வளமான எதிர்காலம் இருக்கிறது. கோயில் பூசாரியின் ஆதங்கம், அத்தனை களேபரத்திலும் நடக்கும் இன்னொரு இளங்காதல், திருமணத்தில் கருகிய பெண்ணின் காவல்துறை வேலைக்கனவுகள், ஏன் கட்டில் கூட ஒரு கதாபாத்திரமாக நம்மை தலை சுற்ற வைக்கின்றன. சின்னச் சின்ன சுவாரசியங்கள் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல இசையை கொடுத்திருக்கிறார்கள். நாதஸ்வரமும், கெட்டி மேளமும் படம் நெடுக போட்டி போடுகின்றன. இசையமைப்பாளார் (பரத் சங்கர்) பேசப்படுவார். சிறு முதலீட்டுப் படம் என்பதால் அதற்குரிய அழகியல் பற்றாக்குறையும் இருக்கிறது. படத்தொகுப்பாளர் (அசோக் அர்ஜுனன்) கொஞ்சம் கறாராக இருந்திருந்தால், இன்னும் படம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். உறவுச் சண்டைகளில் கூச்சலும், குழப்பமும் அதிகமிருக்கிறது.

ஒளிப்பதிவிற்கும் (சுரேந்திரன்) இன்னும் கொஞ்சம் செய்நேர்த்தி தேவைப்படுகிறது. ‘ஓர் இரவு’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘விடியும் வரை காத்திரு’ என்று கதைக்கு நாகரீகமாகவும், அழகியலாகவும் பெயர் வைத்த காலமெலாம் போய் விட்டது. பார்வையாளர்களை அதிர்வூட்டுவதற்காக, தலைப்புச் சூடும் காலம் இது, இயக்குநர் இன்னும் கொஞ்சம் தலைப்பு குறித்து யோசித்திருக்கலாம். முருங்கைகாயை கிளுகிளுப்பான காயாய் மடைமாற்றம் செய்தவர்கள்தானே நாம். மனதிலிருக்கும் பொதுப் புத்தி ஒரு படத்தின் தலைப்பை எவ்வாறு தவறாக பொருள் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
– செ.தமிழ்ராஜ் , மதுரை

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *