
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வை தவெக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை திடீரென உயர்ந்திருப்பது சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பெருமளவில் பாதித்துள்ளது.பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், விலையில்லா அரிசி வழங்கப்படுவதன் மூலம் ஏழை எளிய மக்களின் சுமை ஓரளவுக்குக் குறைந்தாலும், வெளிச்சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.
அணைகளில் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. எனினும், இதனால் எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரிசி விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, தவெக அரசு உடனடியாகச் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி: அரிசி ஆலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் மின்கட்டணத்தை ரத்து செய்து, மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். லாரி வாடகையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களை விரைந்து தூர்வாரி, நீர்மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்குத் தடையற்ற நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



