கீழடி அகழாய்வு அறிக்கையை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை: அமர்நாத் ராமகிருஷ்ணா!

கீழடி அகழாய்வு அறிக்கையை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என்று ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இப்பணிகளின்போது தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா நியமிக்கப்பட்டார். முதல் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட 982 பக்க அகழாய்வின் அறிக்கையை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்பித்தார். சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது கீழடி நாகரிகம் என்பதையும் அங்கு நிலவிய கலாச்சாரம், விவசாயம், பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கிய பயணம் குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் குறித்தும் அந்த அறிக்கையில் விளக்கியிருந்தார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையை ‘தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது’ என்று மதிப்பீட்டுக்குழு விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, கீழடி அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறை அவருக்கு கடிதத்தை அனுப்பியது. அந்த கடிதத்திற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலளித்துள்ளார். அத்துடன் , “அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளை கொண்டு கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மேலும் குழுவின் மதிப்பீடு, துல்லியமற்றது, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது என்று தெரிவித்திருந்தார். தற்போது அவர், தொல்லியல் துறையின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தேசிய பணிக்குழு இயக்குநராக உள்ளார்.

அவருக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி தொல்லியல் துறை மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியது. அதில், மதிப்பீட்டு குழு குறிப்பிட்டிருந்தவாறு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமர்நாத் ராமகிருஷ்ணா, மே 11-ம் தேதி ஏஎஸ்ஐயின் உள் ஆய்வுக்குழுவுக்கு ஓர் கடிதத்தை அனுப்பினார்.

அதில், “எனது மனசாட்சிக்கும், தொல்லியலில் தனக்கு இருக்கும் சிறந்த அறிவின் அடிப்படையிலும் உண்மையாகவே அந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளளேன். எனவே தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வமான அறிவுறுத்தலையும் நான் மீறியிருப்பதாக குற்றம்சாட்டுவது தவறு. கடந்த 2023 ஜனவரியில் நான் சமர்ப்பித்த எனது கீழடி அகழாய்வு அறிக்கையின் நகலையும், அதன்மீது உள் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவின் விமர்சனக் குறிப்புகளையுமே என்னிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக என்னுடைய அறிக்கையை மேம்படுத்துமாறு கோரியபோது, எவ்விதமான ஏற்புடைய காரணங்களையோ அல்லது தகுந்த நியாயங்களையோ ஆய்வுக்குழு அதில் குறிப்பிடவில்லை. விமர்சன மதிப்பீடு மற்றும் பரிந்துரைகள் என்ற தலைப்பிலான 114 பக்க அறிக்கையை அவர்கள் எனக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த அறிக்கை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானது. மேலும், கீழடி அகழாய்வு இயக்குநராக எனது கடமைகளை நிறைவேற்றியபோது இந்தியத் தொல்லியல் துறையில் எதிர்பார்க்கப்படுவதைப் போலவும், பின்பற்றப்படுவதைப் போலவும் மிக உயர்ந்த தொழில்முறை நேர்மையோடு, எனது முழுத் திறனையும் பயன்படுத்தி மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளேன். அதுபோலவே எனது அறிக்கையை எழுதியபோதும், தொல்லியல் துறையின் விதிமுறைகளையே பின்பற்றினேன். மேலும், அகழாய்வு செய்யப்பட்ட தளத்திலிருந்து கிடைத்த பொருட்களை வைத்து, கலாச்சார மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் எனது முடிவுகளைத் தெரிவித்துள்ளேன். இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள எனது முடிவுகள் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடும், முழுமையான நம்பகத்தன்மையோடும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது முந்தைய அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை. நிறுவப்பட்ட நிர்வாக நெறிமுறைகள் மற்றும் பணி விதிகள் ஆகியவற்றின்படி எனக்கு வழங்கப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தலையும் கடைப்பிடிக்க நான் மறுத்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *